Tamil Movie Ads News and Videos Portal

Lover-விமர்சனம்

நாம ரொம்ப விரும்புற ஒன்னு நமக்கு கிடைக்குமா? மிஸ் ஆகுமா? என்ற ஏக்கம் தான் காதல். அந்தக் காதல் தான் இந்தப்படம்

ஹீரோ மணிகண்டன் கபே வைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ளார். இது அவரது புறவியல் சார்ந்த வாழ்க்கை லட்சியம். அகம் சார்ந்த லட்சியம் ஒன்றே ஒன்று தான். அது அவரது காதலி அவரை விட்டு எங்கும் மனதளவில் கூட நகர்ந்து விடக்கூடாது. தான் செய்வது எல்லாமே சரி என்ற புரிதல் கொண்ட சராசரி காதலன் அவர். இப்படியான காதலனை காதலியான ஸ்ரீ கெளரி ப்ரியா எப்படி சகித்துக் கொள்கிறார். எப்போதெல்லாம் சடைத்துக்கொள்கிறார். முடிவில் அகம் உடையும் இவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதாக படம் விரிகிறது

மணிகண்டன் தாழ்வு மனப்பான்மையும் மன பதட்டமும் உள்ள காட்சிகளில் காட்டும் பெர்பாமன்ஸ் அருமை. சின்னச் சின்ன உடல்மொழிகளிலும் தன் கேரக்டரை பிரதிபலித்துள்ளார். ஸ்ரீகெளரி ப்ரியா 100 படங்களில் ஹீரோயினாக நடித்தவர் போல மிக இயல்பாக உணர்வுகளை கடத்துகிறார். காதலனை பயத்தோடும் ஒருவித எதிர்பார்ப்போடும் அவர் பார்க்கும் விதம் அட்டகாசம். கண்ணா ரவி தன் கேரக்டருக்கு நியாயம் சேர்த்து அழகாக நடித்துள்ளார். சரவணன் மூன்றே காட்சிகளில் வந்தாலும் தன் இருப்பில் நெருப்பூற்றிச் செல்கிறார். கீதா கைலாசம் தேர்ந்த நடிப்பால் ஒரு காட்சியில் கண்களை குளமாக்குகிறார். படத்தில் மிக வலிமையாக அமைக்கப்பட்ட கேரக்டர் இவரது கேரக்டர் எனலாம்

ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கதையின் இயல்பையும் எதார்த்தையும் மீறாமல் அமைந்துள்ளது. ஷான் ரோல்டன் இசை வழியாக கதை சொல்லியுள்ளார். மணிகண்டனை அவரது அப்பாவோடு ஸ்ரீகெளரி ப்ரியா ஒப்பிட்டுப் பேசும் போது ஷான் ரோல்டன் திரையில் பரவவிடும் மெளனம் நமக்குள்ளும் தொற்றுகிறது. விலகாதே பாடலும் ரிப்பீட் மோட் ரகம். எடிட்டிங், ஆர்ட் என டெக்னிக்கல் டீம் நன்றாக வேலை செய்துள்ளது

தாழ்வுமனப்பான்மை உள்ள ஆண்கள் காதலியிடம் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மிக எதார்த்தமாக எழுதி காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் பிரபு ராம் வியாஸ். மிகவும் மெச்சூட் ஆன வசனங்களை எழுதி பல இடங்களில் கைத்தட்டலும் பெறுகிறார். படத்தில் யார் செய்வது சரி, தவறு என்ற ஆராய்ச்சியை ரசிகர்களுக்கே அவர் திருப்பிவிட்ட விதமும் நல்ல ஐடியா. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆண்களின் அடிப்படை குணம் மாறாது என்பதை கண்ணா ரவி கேரக்டர் மூலமாக டைரக்டர் உடைக்கும் இடம் அட்டகாசம். இன்றைய காதலர்கள் தங்கள் இணையரின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு பார்க்க வேண்டிய படம் இந்த லவ்வர்
3.75/5
-மு.ஜெகன் கவிராஜ்