லவ் என்ற தலைப்புக்குப் பதில் ஜவ் என்று வைத்திருக்கலாம்..அவ்வளவு இழுவை
பரத்திற்கு பெரிதாக வேலை எதுவுமில்லை. ஆனாலும் அவரின் நேர்மைக்காக அவரை திருமணம் செய்கிறார் வாணிபோஜன். ஒரு வருடம் கடக்கிறது. இருவருக்கும் மனக்கசப்புகள் மேலோங்க, பரத் ஒரு அதிர்ச்சிகரமான காரியத்தைச் செய்கிறார். அதற்குப் பின்னால் ஒரு சைக்காலஜிக்கல் மேட்டர் ஒன்றும் வர, முடிவு என்னானது என்பதே படத்தின் கதை
பரத் நல்ல நடிகர் என்பது ஊரறிந்த செய்தி. இந்தப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் சரியாக நிரப்பப்படாததால் அவர் நடிப்பை நாம் உள்வாங்க முடியவில்லை. வாணிபோஜன் கிடைத்த நல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
PG.முத்தையாவின் ஒளிப்பதிவில் பெரிய மேஜிக் எதுவுமில்லை. ஒரு வீட்டுக்குள்ளே சுற்றும் கேமராவை வைத்து அவரும் என்னதான் பண்ணுவார்? பாடல்கள் பரவாவில்லை ரகம். பின்னணி இசையும் ஒகே
முன்பாதி படத்தில் இருபது நிமிடத்தை எடிட் செய்திருக்கலாம். உளவியல் சிக்கல் உள்ள ஒருவன் கற்பனையை நிஜம் என கருதி அல்லல் படுவதையும், பரஸ்பரம் நம்பிக்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயக்குநர் பேச நினைத்துள்ளார். மலையாளத்தில் இப்படம் ஏற்படுத்திய சிறு தாக்கத்தைக் கூட தமிழில் ஏற்படுத்த தவறிவிட்டார் R.P.பாலா. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் திரைக்கதையால் லவ் ஜவ் ஆகிவிட்டது
2/5