தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்கமுடியாத பெயர் வசந்தபாலன். இவரது இயக்கத்தில் வெளியான “வெயில்”, “அங்காடித் தெரு” ஆகிய படைப்புகள் காலத்தால் அழியாதவை. மேலும் இவர் இயக்கிய ‘அரவாண்’ ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களும் வித்தியாசமான முயற்சியில் உருவானவை. ஆனால் அவை சொல்லிக் கொள்ளுபடியாக ஓடவில்லை. தற்போது வசந்தபாலன் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து “ஜெயில்” என்னும் படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் வெளியீட்டிற்கு எப்போதோ தயாராகியும் கூட, இன்னும் படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில், “நான் எழுதிய கதையினை படமாக்க ஒரு தயாரிப்பாளரை பிடிக்க தலைகீழாக நிற்க வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனின் கால்ஷீட்டினைப் பெற தலைகீழாக நடக்க வேண்டும். படப்பிடிப்பு தடையின்றி நடைபெறுவது என்பது கையில் அக்னிச்சட்டியுடன் ஒற்றைக் கயிற்றின் மீது நடப்பதற்கு ஈடானது. இதையெல்லாம் விட அப்படத்தை ரிலீஸ் செய்வதற்குள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்விடுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.