JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, ‘சண்டியர்’ ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பள்ளி நண்பர்களாக ஒன்றாக படித்து இன்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் அவரது 40 நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாயகி ராஜலட்சுமி பேசும்போது,
“இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்து நம்பிக்கையை கண்டு வியந்து போனேன்.
பொதுவாக ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் பாசிட்டிவாக இருந்தாலும் போகப்போக அவர்களிடம் மாற்றம் வரும். ஆனால் ஜீவானந்தம் சார் கடைசி வரை மாறவே இல்லை. பைஜூவின் இசையில் நிறைய ஆல்பங்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடியுள்ளேன். நல்ல இசையமைப்பாளர் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். அயலி புகழ் அபி நட்சத்திரா நடிக்கும் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை. 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நாந கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம் தான்.
ஒருமுறை ராதாரவி சார் என்னிடம் பேசும்போது இனி அடுத்து எந்த நிகழ்வுக்கு வந்தாலும் உன் கணவரை அழைத்து வரக்கூடாது என்று விளையாட்டாக கூறுவார். இன்று இந்த நிகழ்வுக்கு என் கணவர் வரவில்லை. ஆனால் அதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லை.. எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த மே மாதம் முழுவதும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இன்று இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டிய இருந்ததால் எனது கணவரை எனக்கு பதிலாக அந்த நிகழ்வுக்கு அனுப்பி விட்டேன்” என்று கூறினார்.
#License