“2k kid-ஐ குறி வச்சா மட்டும் போதாது..அதில் கொஞ்சம் பேமிலியும் இருக்கணும்” என முடிவு செய்து களம் இறங்கியிருக்கிறது LGM டீம்!
ஹரிஷ்கல்யாண், இவானா இருவரும் காதலர்கள். Let’s get married? என இவானாவிடம் கேட்கிறார் ஹரிஷ் கல்யாண். “உன்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ok ஆன மாதிரி உங்க அம்மாவோடவும் ok ஆகணும்” என்கிறார் இவானா! அந்த கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய ஹரிஷ் கல்யாண் என்ன முடிவு எடுத்தார்? ஹரிஷ் அம்மாவான நதியாவிற்கும் இவானாவிற்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆச்சா? என்பதே திரைக்கதையாக விரிகிறது
ஹரிஷ் கல்யாணுக்கு வயதுக்குத் தகுந்த படமாக வாய்ந்திருக்கிறது. களமறிந்து நடித்துள்ளார். இவானா கிட்டத்தட்ட ஜெனிலியா போன்ற கேரக்டர் என்பதால் டேக் இட் ஈசியாக கேண்டில் செய்துள்ளார். சில இடங்களில் இளைஞிகளை கவர்வது போன்ற வசனங்களைப் பேசுகிறார். யோகிபாபுவை கமர்சியலுக்காக யூஸ் பண்ணியிருந்தாலும் கதையோடு கனெக்ட் ஆகவே செய்கிறார். ஆர்.ஜே விஜய் பல இடங்களில் நல்ல நல்ல பன்ச்களால் காப்பாற்றுகிறார்.
படத்தின் இயக்குநரான ரமேஷ் தமிழமணி தான் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். பல இடங்களில் பின்னணி இசை இளமைத்துள்ளலுடன் இருந்தாலும் பாடல்களில் இன்னும் கூட கவனம் எடுத்திருக்கலாம். காஸ்ட்லியான லைட்டிங்-ஐ செட் செய்து நல்ல நல்ல ப்ரேமிங்கை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்
மாமியாரின் குணநலன்கள் தன்னோடு ஒத்துப்போகுமா? என்று ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே யோசிக்கும் தெளிவு நல்ல ஐடியா! மேலும் தற்போதுள்ள பெண்கள் இப்படியாக சுயமான முடிவை எடுத்து ஆராய்ந்து பார்க்கும் போக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதும் சிறப்பு. படத்தின் பின்பாதியில் சின்னச் சின்ன தேக்கம் தெரிவதைச் சரி செய்திருக்கலாம். புலி சீக்வென்ஸ், சாண்டி மாஸ்டர் சீக்வென்ஸ் ஓரளவு வொர்க்கவுட் ஆகியிருப்பது படத்தை வளர்த்தெடுக்கிறது. Let’s get movie? என்று கேட்டால் க்ளீன் U சர்டிபிகேட் படமான LGM-க்கு தாராளமாகச் செல்லலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்