Tamil Movie Ads News and Videos Portal

லால் சலாம்- விமர்சனம்

அழுக்குப் படிந்த ஓடை நீர் கடலுக்குள் போனால் நீரோடு நீராகிவிடும். உடலுக்குள் போனால் நிலைமை சீரியஸாகி விடும். அப்படித்தான் சினிமாவும். கலை நேர்த்தியோடு கருத்தைச் சொன்னால் நல்லாவும் பேசுவாங்க கல்லாவும் கட்டலாம். கருத்துக்காக கலை நேர்த்தியை காவு கொடுத்தால் ரிவ்யூவும் நல்லா வராது. ரெவ்னுயூவையும் பாதிக்கும். லால் சலாம் லோல் பட்டது இரண்டாவது மேட்டரில் தான்.

முஸ்லீமும் இந்துவும் ஒற்றுமையாக வாழும் ஊரில் பகையை வளர்த்து விட்டால் ஓட்டைப்பிரிக்கலாம் என அரசியல் வாதிகள் கணக்குப் போடுகிறார்கள். அதற்காக ஊருக்குள் இருக்கும் விஷ்ணுவிஷால் அண்ட் கோ-வை கொம்பு சீவி விடுகிறார்கள். பெரிய டான் & பிஸ்னெஸ் மேன் ஆன ரஜினியின் மகன் விக்ராந்த்-ஐயும் கொம்பு சீவி விடுகிறார்கள். இந்தச் சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட ரஜினி எப்படி மதம் தாண்டிய மனிதத்தை மீட்டெடுக்கிறார் என்பதே மீதிக்கதை

மேலே சொல்லியிருப்பது தான் படத்தின் மூலக்கதை. ஆனால் படத்தில் இதைத் தவிர்த்து பல நீளக்கதைகள் இருக்கின்றன. அவையெல்லாம் நான் லீனியர் முறையில் வந்து நம்மை டயர்டும் ஆக்குகின்றன.

மொய்தீன் பாயாக வரும் ரஜினி கிட்டத்தட்ட படத்தின் மெயின் ரோலாகவே வருகிறார். கெஸ்ட் ரோல் என்பதெல்லாம் சும்மா. ஆனால் பாவம் அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கில் துளியும் டெப்த் இல்லை. மேலும் அவரின் உடல் பலவீனங்கள் தெரியும் படி காட்சிப்படுத்தி கடுப்பேற்றியுள்ளனர். விக்ராந்த் விஷ்ணு விஷால் இருவரும் நன்றாக நடித்திருந்தாலும் பெரிய இம்பேக்ட்-ஐ அவர்கள் கேரக்டர்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட இன்னும் டஜன் கணக்கான ஆர்டிஸ்ட்கள் வந்து போகிறார்கள். தம்பி ராமையா மட்டும் கவனிக்க வைக்கிறார்

ஆகப்பெரிய ஏமாற்றம் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை. காட்சிகளின் உணர்வுக்கும் இசைக்கும் சம்பந்தமில்லாத ஓசையே படமெங்கும் இசையாய் ஒலித்து இம்சை செய்கிறது. ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் இருந்தாலும் ரஜினியை இவ்வளவு வீக்-ஆக காட்டியிருக்க வேண்டாம்.

இந்து கோவிலின் தேர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் முஸ்லீம் மசூதியில் உள்ள ஒரு வாகனத்தை தேராக கொண்டு வரும் காட்சியில் கூடிவந்த நெகிழ்ச்சி படமெங்கும் தூவப்பட்டிருந்தால் லால் சலாம் ஆள் சென்டரிலும் சலாம் போட வைத்திருக்கும். ஆனால் தெளிவற்ற திரைக்கதை, கிரிஞ் ஆன மேக்கிங், சீரியல் போன்ற வசனங்கள் என படத்தில் ஏகப்பட்ட கிரியேட்டிவ் பஞ்சம். லைகா போன்ற இஷ்டத்திற்கு செலவு செய்ய நல்ல புரொடக்சன் கிடைத்தும், நாடே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் கிடைத்தும், சதம் அடிக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

வாய்ப்பு என்பது எளிதில் அமையாது. அது எளிதில் வாய்க்கக் கூடிய வாய்ப்பு இருப்பவர்கள் அந்த வாய்ப்பை முத்தாய்ப்பாக மாற்ற வேண்டும். இப்படியெல்லாம் சொதப்பக்கூடாது. பெரு வருத்தத்தோடு தான் இந்த பதிவு

லால் சலாம்- உயிரற்ற விதை
2/5
-மு.ஜெகன் கவிராஜ்