கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வியலை பேச முயன்றிருக்கும் படம் லேபர்
லேபர் என்ற சொல்லில் ஓர் தாழ்வுமனப்பான்மை குடிகொண்டிருக்கும். அந்த தாழ்வுமனப்பான்மையை முதலாளி வர்க்கம் மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும். லேபர்களால் அவ்வளவு எளிதில் தாழ்வுமனப்பான்மையை விட முடியாது. காரணம் அவர்களுக்குள் முதலாளி வர்க்கத்தால் ஏற்படுத்தப்பட்ட உளவியல் சிக்கல் அது
லேபர் படத்தில் தன் மகனும் இப்படி ஒரு கட்டுமானத் தொழிலாளியாகவே ஆகிவிடக்கூடாது என்று மகனை இன்ஜினீயர் ஆக்க முயற்சிக்கிறார் நாயகன் முருகன். அவரின் உற்றதுணையாக அவரது மனைவி சரண்யா ரவி இருக்கிறார். இவர்களின் சேமிப்புகளை ஏலச்சீட்டில் போட்டு வைக்கிறார்கள். ஏலச்சீட்டை பிரிக்கும் ஒரு தம்பதிகள் ஏழைத் தொழிலாளர்களின் பணத்தை அபேஸ் செய்ய, திக்கற்று நிற்கின்றனர் முருகனும் சரண்யா ரவியும். அடுத்த என்ன நடந்தது? என்பதே லேபரின் முதன்மைக்கதை. மேலும் இதே கட்டிட வேலை செய்து வரும் திருநங்கை ஜீவாவிற்கு டீச்சர் ஆகவேண்டும் என்ற கனவும் இருக்கிறது. அந்தக் கனவுக்கான பதிலும் படத்தில் இருக்கிறது
எளியவர்களின் கதையை கொஞ்சம் எளிமையாய் எடுத்திருந்தாலும் பதிவு செய்யவேண்டும் என்ற இயக்குநர் சத்தியபதியின் நேர்மைக்கு முதலில் வாழ்த்துகள். கணவன் மனைவியாக நடித்துள்ள முருகன், சரண்யா ரவி இருவருமே நல்லதேர்வு. கட்டுமான வேலை செய்பவர்களில் பலர் உடல்வலிக்காக குடிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அதே சமயம் அவர்களின் குடியால் வீட்டார் படும் வலிகளையும் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.
திருநங்கைகளை இப்படியான பாசிட்டிவ் அடையாளத்தோடு பார்ப்பதில் அழகும் இருக்குறது. அன்பும் இருக்கிறது
நல்ல விசயத்தை கையில் எடுத்த இயக்குநர் நல்ல திரைமொழியையும் பயன்படுத்தி இன்னும் உழைத்திருந்தால் இந்த லேபர் முதலாளியாகி இருப்பார். ஜஸ்ட் மிஸ்..But one time watch-க்கு ஏத்த படம்
-மு.ஜெகன் கவிராஜ்