Tamil Movie Ads News and Videos Portal

“லேபிள்” எனக்கு அடையாளம் தரும்-நடிகர் அரிஷ் குமார் நம்பிக்கை!

‘லேபிள்’ வெப் சீரிஸ் குறித்தும் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்கள் குறித்தும் சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அரிஷ் குமார்.

“எத்தனையோ ரீமேக் படங்கள் வந்து போகின்றன. எல்லாமே தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் ஹிந்தி ரீமேக்காக வெளியானாலும் கூட அதில் நம் சமூக நீதிக்கான விஷயங்களை அழுத்தமாக பேசி இருந்தார் அருண்ராஜா.

அவரது எழுத்துக்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த படம் பார்த்துவிட்டு உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.அப்படியே அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பும் எனது ஆசையையும் வெளிப்படுத்தினேன். பெரும்பாலும் நான் இதுபோன்று நட்பை பயன்படுத்தி வாய்ப்புகள் தேட விரும்புவதில்லை.

ஆனால் சிலரது படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே ஏற்படும் தானே..??! அப்படித்தான் அருண்ராஜா காமராஜிடம் எனது விருப்பத்தைக் கூறினேன். அவரும் அதை மறவாமல் மனதில் வைத்து, தான் இயக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை எனக்கு கொடுத்தார்.

வெப் சீரிஸ் என்கிறபோது அதில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வெப் சீரிஸில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘லேபிள்’ என்றால் ஒரு அடையாளம்.. ஒரு பிராண்ட்.. அந்த வகையில் இந்த லேபிள் மூலம் நான் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன்.

இதுவரை வெளிவந்த வெப் சீரிஸ்களில் இருந்து சற்று வித்தியாசமாக அதே சமயம் ஹை குவாலிட்டி ஆக இது உருவாகி உள்ளது. இதை வெப் சீரிஸ் என்று சொன்னாலும் இதை ஒரு திரைப்படமாகத்தான் பார்க்கிறார்கள். மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளுடன், பாடல்களும் இதில் இருக்கிறது.பெரும்பாலும் பல பேர் சினிமா மீதான மோகத்தில் தான் இங்கே வருகிறார்கள். ஆனால் சில பேர் மட்டும் சினிமாவிற்குள் வந்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே வருவார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் அருண்ராஜா காமராஜ்.

சமூக நீதியை தெளிவாக பேசக் கூடிய ஒரு இயக்குநராகத்தான் அவரை நான் பார்க்கிறேன். இந்த லேபிளிலும் மிகப்பெரிய ஒரு விஷயத்தைப் பேசி இருக்கிறார்.இதுதான் நான் நடித்துள்ள முதல் வெப் சீரிஸ். சினிமா, வெப் சீரிஸ் இரண்டுக்குமே நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே மாதிரியான உழைப்பைத் தான் கொடுக்க வேண்டியிருக்கிறது. இரண்டும் வெளியாகும் தளங்கள் வெவ்வேறு என்றாலும், வெப் சீரிஸ் ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் நிலைத்து நிற்கும். இரண்டு மணி நேர படத்தில் ஒரு ரசிகனை பல சமயங்களில் கன்வின்ஸ் செய்வது இயலாத காரியம். ஆனால் ஒரு வெப் சீரிஸ் ஏதோவொரு இடத்தில் ரசிகனை திருப்திப்படுத்தி விடும். அதுதான் இந்த இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசமாக நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு திரைப்படத்தில் நடித்த அனுபவம் தான் இதில் எனக்கு கிடைத்தது.

இனி வேறு வெப் சீரிஸ்களின் நடிக்கும்போது தான் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா எனப் பார்க்க முடியும்..

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு விதமான சினிமா ட்ரெண்டிங்கில் இருக்கும். இப்போதெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. ரசிகர்களின் டேஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் எந்த ட்ரெண்டிங்கில் நாம் படம் பண்ணப் போகிறோம் என்பதற்குள் அடுத்து புதிய ட்ரெண்டிங் வந்துவிடுகிறது. இப்படி ஆறு வருடம் கழித்து உள்ளே வரும்போது எல்லாமே கொஞ்சம் புதிதாக மாறி இருந்தது. இந்த இடைவெளி கூட எனது தவறினால் நிகழ்ந்தது தான்..

இப்போது அருண்ராஜாவிடம் வாய்ப்பு கேட்டது போல எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்களை அணுகி வாய்ப்பு கேட்டு என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்று இருக்க வேண்டும். அதை உணர்வதற்கு கொஞ்சம் காலம் அதிகமாகவே ஆகிவிட்டது. நாம் தட்டும் எல்லா கதவும் நமக்காக திறக்கப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு கதவு திறக்கும்.. தட்டுவதை மட்டும் நாம் நிறுத்தக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன்.

இந்த வெப் சீரிஸை வெறும் 70 நாட்களில் எடுத்து விட்டார் அருண்ராஜா காமராஜ்.