பாரஸ்ட் கம்ப் என்ற உலகப்படம் ஒன்று உலகப்பிரசித்த பெற்றது. அப்படத்தை தழுவி ஒரு நல்லபடத்தை எடுக்க நினைத்த அந்த சிந்தனைக்காகவே நடிகர்&தயாரிப்பாளர் அமீர்கானை நாம் பாராட்டலாம்
மனவளர்ச்சியில் சிறிய குறைபாடுள்ள ஒருவனை ஊர் நிராகரிக்கும் போது ஒரு பெண் நட்பால் அரவணைக்கிறாள். அந்த நட்பை காதலாக்க அமீர்கான் நினைக்க, அவளுக்கு வேறோர் நினைப்பு வருகிறது. இருவரும் வெவ்வேறு பாதையில் செல்கிறார்கள். முடிவில் இருவரின் இணைவும் எப்படி நடந்தது என்பதே படத்தின் கதை! இதனிடையே 1984 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு கலவரத்தை கதையோடு கோர்த்திருக்கிறார்கள்
அமீர்கான் தனது அநாசமான நடிப்பால் லால்சிங் சத்தா கேரக்டருக்கு ஜீவனை கொடுத்துள்ளார். ஒரு வசனத்தைச் சொல்லிமுடித்தபின் எக்ஸ்ட்ரா ம்ம் எனச்சொல்லும் அவரது குரல் கூட அவ்வளவு இயல்பாக நடித்துள்ளது. கரீனா கபூர் பரிதாபத்தையும் அனுதாபத்தையும் அள்ளுகிறார். அவர் கேரக்டர் மூலமாக வாழ்வின் எதார்த்தங்களை உணர்த்தியிருக்கும் இயக்குநரின் திறன் பாராட்டத்தக்கது. உதிரி கேரக்டர்கள் கூட படத்தில் கவனம் ஈர்க்கிறார்கள். நாக சைதன்யா மற்றும் முகமத் கேரக்டரில் வருபவர் இருவரும் கதையின் கணம் உணர்ந்து நடித்துள்ளார்கள்
கார்கில் போர் உள்ளிட்ட காட்சிகளின் வீரியம் கண்களையும் நெஞ்சையும் விட்டு அகல மறுக்கிறது. அதற்கான காரணம் ஒளிப்பதிவின் பேரழகும் நேர்த்தியும். படத்தில் பாடல்கள் தேவைப்படும் இடத்தில் மட்டுமே வருகிறது. அதுவும் நன்றாகவே இருக்கின்றன.
பின்னணி இசையும் படத்தின் பலம்
லால்சிங் சத்தாவின் தன் வாழ்வுப்பயணம் தான் படம் என்றான பின், நீளத்தைச் சற்று சுருக்கியிருக்கலாம். எடிட்டர் சில இடங்களை நறுக்கியிருக்கலாம். காதல், கார்கில் போர், நட்பு செண்டிமெண்ட் என முன்பாதியில் லால்சிங் ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கிறார். ஆனால் அவையெல்லாவற்றையும் சற்று அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு பின்பாதி பின் தங்கிவிடுகிறது. படத்தின் முடிவில் பெரிய அதிர்வை எதிர்பார்த்தால் அது மிஸ்ஸிங்.. But இப்படியான படங்கள் மூலம் மனிதனுக்குள் இருக்கும் பேரன்பு வெளிப்பட வாய்ப்பிருப்பதால் லால்சிங் சத்தாவை நாம் கொண்டாடியே தீரவேண்டும்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்