Tamil Movie Ads News and Videos Portal

நான் அமீர்கானின் தீவிர ரசிகன் – உதயநிதி அதிரடி பேச்சு!

”நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். பாரஸ்ட் கெம்ப் எனும் ஆங்கில படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான அமீர்கான், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன், நடிகை மோனாசிங், படத்தினை தயாரித்திருக்கும் வயாகாம் 18 எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’டடித்துவிட்டு அமீர் கானின் ‘ரங்கீலா’ படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன்.

மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் லால் சிங் சத்தா படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘லால் சிங் சத்தா’ படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்.” என்றார்.

வயாகாம் 18 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே பேசுகையில், ” அமீர்கான் மற்றும் லால் சிங் சத்தா உடனான எங்களது பதினான்கு ஆண்டுகால பயணம், ஒரு நல்ல இடத்தை தொட்டிருக்கிறது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் இப்படம் வெளியாவது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. இந்தப் படைப்பு இந்திய அளவில் உருவானது. இதனை சாத்தியப்படுத்தியது எளிதானதல்ல. அமீர்கான் என்ற ஒரு கலைஞரால் மட்டுமே… அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் மட்டுமே இது சத்தியமாகியிருக்கிறது. இயக்குநர் அத்வைத் சந்தன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர், பல்வேறு தடைகளை கடந்து லால் சிங் சத்தாவை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய கடின உழைப்பை ரசிகர்கள் அங்கீகரிப்பார்கள்.”
என்றார்.

நடிகை மோனா சிங் பேசுகையில், ” லால் சிங் சத்தா படத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். சென்னையில் இப்படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தை உங்களுடன் கண்டுகளித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அமீர்கான், அத்வைத் சந்தன் மற்றும் லால் சிங் சத்தா உடனான பயணம் இனிமையானது. மறக்க இயலாது. இந்தத் திரைப்படம் ஒவ்வொரு இந்தியனையும் உணர்வு பூர்வமாக அவர்களது மனதை தொடும். படத்திற்கும் பேராதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் அத்வைத் சந்தன் பேசுகையில், ”பாரஸ்ட் கெம்ப் எனும் படைப்பு, லால் சிங் சத்தா என்ற பெயரில் உருமாற்றம் பெற்றிருப்பதும், அதனை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதும் அமீர்கான் எனக்கு அளித்த ஆசி. திரைக்கதை ஆசிரியர் அதுல் குல்கர்னியின் உழைப்பு எளிதானதல்ல. அமீர்கான், அஜித் ஆந்த்ரே, மோனோசிங், நாக சைதன்யா போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த படைப்பு நிறைவு பெற்றிருக்காது. சென்னைக்கு வருகை தந்து இந்தப் படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தை பார்வையிடும் போது புதிய படம் போல், புது அனுபவத்தை அளித்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் படைப்பு என்பதால் இதற்கு ரசிகர்களிடத்தில் பெரும் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன்.” என்றார்.

நடிகர் நாக சைதன்யா பேசுகையில்,” நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். சென்னைக்கு வருகை தருவது நீண்ட நாட்களாகி விட்டது. லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்காகவும், அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னைக்கு வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என நினைக்கிறேன். இந்தத் திரைப்படம் என்னுடைய கலை உலக பயணத்தில் முக்கியமான திரைப்படம். ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் அத்வைத் சந்தன், தயாரிப்பாளரும், நாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை, உங்களுக்காக ஆகஸ்ட் 11ம் தேதி அன்று வழங்குகிறோம். திரையரங்கத்திற்கு சென்று கண்டு களித்து ஆதரவு தர வேண்டுகிறேன். ” என்றார்.

நாயகன் அமீர்கான் பேசுகையில், ” லால் சிங் சத்தா படத்தை தமிழகம் முழுவதும் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் மறுப்பு தெரிவிக்காமல் வெளியிடவிருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதனை பின்பற்ற வேண்டும் என்பதனை இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் நேர்மறையாக உணர்த்திருக்கிறார்கள். இந்தப் படைப்பினை உருவாக்கிய அனைவருக்கும், பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு இந்த படைப்பு கவரும் என நினைக்கிறேன்.” என்றார்.