Tamil Movie Ads News and Videos Portal

குற்றப்பரம்பரை-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

துண்டாடப்பட்ட ஒரு இனத்தின் பக்கத்தை அறத்தோடு நின்று பேசியிருக்கிறார் வேல ராமமூர்த்தி. இருயின மக்களின் நடுவே இருந்த இணக்கக் கோட்டை அழித்துப் போட்டவன் எவன்? என்ற கேள்வியை எறிந்துள்ள வேல ராமமூர்த்தியின் இந்தக் குற்றப்பரம்பரை நாவல் மகத்தான படைப்பு..

காடோடி அலையும் இனத்தை அழித்தொழிக்கும் பொருட்டு குதிரைப்படை விரட்டுகிறது. சிக்கியவர்களை கொல்கிறது படை. மிச்சம் மீதி உள்ளவர்கள் ஒரு குளத்தில் பாதி உயிர்களாக கிடக்கிறார்கள். பெரும்பச்சேரியைச் சேர்ந்த சிறுவன் வையத்துரை குளத்திற்குச் செல்கிறான். குளத்தில் மிதிக்கும் சிறுவனின் காலை மண்ணில் புதையுண்டு கிடக்கும் ஒரு கரம் பிடிக்கிறது. அது கள்ளர் இனத்தின் தலக்கட்டான வேயன்னாவின் கரம். சிறுவன் அதிர்கிறான். பின் ஒரு இனமே அங்கு உயிரற்றும் உயிர் மீந்தும் கிடப்பதை கவனிக்கிறான். உடனே தன் சேரிக்குச் சென்று ஆட்களை வரவழைக்க அந்த கள்ளர் இனம் காப்பாற்றப் படுகிறது. குதிரைப்படை வேட்டையில் வேயன்னாவின் மகன்களில் ஒருவன் மட்டும் காணாமல் போகிறான். அந்த இனம் திருடுவதை தொழில் என நினைக்கிறது. திருடுவது தவறென்பது தெரியாத அக்கூட்டத்திற்கு விசுவாசம்,வாக்கு, மானுடநேசம் என்பது உயிர் மூச்சு. கொம்பூதி என்றொரு ஊரில் வாழும் அந்த கள்ளர் இனம் பெருநாழி உள்பட பல கிராமங்களில் திருடுகிறது. பெருநாழியில் அறமற்ற வியாபாரி பச்சமுத்து இருக்கிறான். இவர்கள் திருடும் தங்கம் வைரம் ஆகியவற்றுக்கு ஈடாக தானிய தவசங்களை கொடுத்தே பண்டமாற்றுகிறான். அறியாத கள்ளர் இனம் அவனை பசியாற்றும் தர்மர் என நினைக்கிறது. பெரும்பச்சேரியைச் சேர்த்த வையத்துரை வளர்கிறான். காலம் கடக்கிறது.

பெருநாழி கிணற்றில் பெரும்பச்சேரி ராக்கு தண்ணீர் இறைத்ததிற்காக அவள் கணவனை கட்டி வைத்து வதைக்கிறது பெருநாழியின் கர்வ ஜனம். கொதித்தெழும் கொம்பூதி கள்ளர் இனம் பெருநாழியை அடித்து நொறுக்கி, பெரும்பச்சேரியின் தன்மானத்தை மீட்டெடுக்கிறது. “வானம் கொடுப்பதை மானம் என்று தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை. தண்ணீர் அனைவருக்கும் பொது” என்கிறார் வேயன்னா. வேயன்னாவை எதிர்த்துப் பேச பெருநாழியில் எவருக்கும் துணிவில்லை. தீட்டு ஒழிந்த மகிழ்வில் குதியாட்டம் போடுகிறது பெரும்பச்சேரி. மறுநாள் கெளரவமாக தண்ணீர் இறைக்கச் செல்கிறார்கள் அந்த மக்கள். மனம் செத்த பெருநாழியின் வெட்கங்கெட்ட மனிதர்கள் சிலர் கிணற்றுக்குள் மலத்தை அள்ளி கொட்டிவிட, பெரும்பச்சேரி அவமானத்தில் குறுகுகிறது. கொம்பூதி வேயன்னா நறநறக்கிறார்…மீண்டும் பெருநாழி வேட்டையாடப்பட பெருநாழிக்கு போலீஸ்டேசன் வருகிறது..

பெரும்பச்சேரி மக்கள் மீது தீண்டாமை தீண்டக்கூடாது என்று நினைத்தார் கொம்பூதி வேயன்னா. அது நடக்கவும் செய்தது. ஆனால் ஆண்டை எனும் அதிகார வர்க்கம் பெரும்பச்சேரி மக்களுக்கு வேலை கொடுக்காமல் வதைக்கிறது. உழைத்தே சாப்பிட்ட சேரியினம் பசியில் வதங்குகிறது…

கொம்பூதி வேயன்னா குழுவின் கொட்டத்தை அடக்க சிறு வயதில் குதிரைப்படை விரட்டியதால் ஓடிப்போன வேயன்னாவின் மகனே போலீஸாக வருகிறான். ஒரு பக்கம் பெருநாழியின் சூழ்ச்சி, மறுபக்கம் மகனே எமனாக வந்து நிற்கும் விதி, மாறியே ஆகவேண்டிய கட்டாயத்தால் கள்ளர் இனம் கதிகலங்கி நிற்க…எதிர்பாராத திருப்பத்தை தந்து முடிகிறது கதை…

கிளைக்கதையாக வஜ்ராயினி நாகமுனி ஹசார் தினார் வில்லாயுதம் சம்பந்தப்பட்ட கதையும் இருக்கிறது. மேலும்,கொம்பூதி ஜனங்களின் வேரைக்காத்த வையத்துரை பிறப்பை பற்றிய ஒரு கதையும் இருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் கதை அது.

நாவலில் வரும் கள்ளர் இனத்தின் தாய் கூழானி கிழவிக்கும் அவளது மகன் வேயன்னாவிற்கும் இருக்கும் புரிதலும், தீரமும், அறமும், வெள்ளந்தித் தனமும் எழுத்தாக எப்படித்தான் சாத்தியப்பட்டதோ ரைட்டருக்கு!! இதேபோல் நாவலில் வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வேற்றுமை மனநிலை இருப்பதை அகம் முன் நிறுத்தியிருக்கிறார் வேல ராமமூர்த்தி!

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களே நாவலாக வந்திருப்பதால் அக்காலத்து வாழ்க்கை முறையை, பண்பாட்டை, சாதிகளுக்குள் இருந்த பழக்க வழக்கத்தை பேரொளி காட்டி பதிவு செய்திருக்கிறார். வாழ்வின் ஆதாரமே வயிற்றுக்கு ஆகாரம் என்பது தான். கொம்பூதி ஜனங்களின் தத்துவம் அது. அன்பின் ஆதாரம் என்னவென்றால் அது நம்பியவர்களின் பக்கம் நிற்பது தான் இதுவும் அவ்வூர் ஜனங்களின் தத்துவம். இங்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தவறு செய்பவர்கள் மட்டும் அல்ல..அவர்கள் செய்வதை தவறே இல்லை என்ற உளவியலை உருவாக்குபவர்கள் தான் என்பதை பச்சைமுத்து வழியாக உணர்த்துகிறது நாவல்.

சேரியும் ஊரும் ஒன்றாகும் காலம் கனிந்து வருமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அன்று கனிந்திருந்தது என்பதை வாசிக்கும் போதே அவ்வளவு மகிழ்வாக இருக்கிறது

நமக்கு வேயத்துரையின் மானுட நேசமும், வேயன்னாவின் அறம் நிற்றலும், கூழானி கிழவியின் ஊர்ப்பாசமும், வில்லாயுதத்தின் நேர்மையும், சிட்டுவின் காதலும், அன்னமயிலின் கபடமற்ற மனதும், ஆசாரியின் நன்றி மறவாமையும், வஜ்ரானியின் உறுதியும் தான் வேண்டும். இந்த நாவலை வாசிக்க..வாசிக்க நாவல் அவ்வெண்ணங்களை தூண்டும்..

பாரதிராஜா, பாலா ஆகியோர் இந்நாவலை படமாக்க போட்டிப்போடுகிறார்கள் என்பது நாவலை வாசித்த போது புரிந்துகொள்ள முடிந்தது. திரைப்படங்களில் பரபரப்பாக முடியும் க்ளைமாக்ஸ் காட்சிகள் அமைந்தால் அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் க்ளைமாக்ஸ் போன்ற பரபரப்பை பற்ற வைக்கிறது. இப்படைப்பின் வேரைக் கெடுக்காமல் படமாகவோ வெப்சீரிஸாகவோ யார் எடுத்தாலும் Sure shot hit confirme