இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.