கமர்சியலாக ஒரு வெட்டாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அந்த வெட்டை ஆடியன்ஸ் மீது போட்டிருப்பது தான் வேதனை
மதுரை சிம்மக்கல்லில் சிங்கம் போல ராதிகா. அவருக்கு தங்கம் போல ஒரு மகன். அந்த மகனுக்கு ஒரு நண்பன். அந்த நண்பன் நம் நாயகன் அதர்வாவிடம் உரண்டை இழுக்கிறார். அந்த உரண்டை வளர வளர…சிலபல பிரச்சனைகள் கிளம்ப..ஒரு கட்டத்தில் இந்த ஆட்டத்திற்குள் வேறுசில கிளையாட்டங்களும் நிகழ…முடிவில் குருதி ஆட்டத்தில் யாரெல்லாம் (நாம் உள்பட) பழியானார்கள் என்பதே படத்தின் கதை
அதர்வா நெருப்பாக ஜொலிக்கிறார். ஒரு குழந்தைக்கும் அவருக்குமான எமோஷ்னல் காட்சிகள் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. பிரியாபவானி சங்கர் படத்தில் தேமே என வந்துபோகிறார். ராதிகா மட்டும் நடிப்பில் அசாத்தியமாக ஸ்கோர் செய்துள்ளார். ராதாரவி இயல்பாக ஈர்க்கிறார். ராதிகாவின் மகனாக வரும் கண்ணாரவி நச்சென்று நடித்துள்ளார். அந்தக்குட்டிப்பொண்ணின் நடிப்பும் செம்ம
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தில் இல்லாத பரபரப்பை கொடுக்கிறது. ஒளிப்பதிவில் மதுரை ரத்தவெறியாகி குலுங்குகிறது. படத்தின் வசனங்கள் ஷார்ப்பாக இருந்தது
படத்தின் துவக்கம் முதலே திரைக்கதை தள்ளாடுவதால் நம் கவனத்தை ஒருமித்து ஈர்க்கவில்லை படம். க்ளைமாக்ஸ் காட்சியில் தொக்கி நிற்கும் லாஜிக் கேள்விகள் இது குருதி ஆட்டமா…இல்லை குழப்ப ஆட்டமா என்ற முடிவை எடுக்க வைத்துவிடுகிறது
2/5
-மு.ஜெகன் கவிராஜ்