இயக்குநர் கே.ஸ்ரீராம் முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். பரதம் சம்மந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன என்பதை இயக்குநர் ஸ்ரீராம் நம்மிடம் தெரிவித்தார்.
” இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடித்த ‘வரலாறு’ படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக காட்டப்படும். அதே போல ‘விஸ்வரூபம்’ படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால் மனைவி வெறுப்பதாக காட்டப்பட்டிருக்கும். பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.
படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது. விரைவில் வெளியாகும்” என்றார் ஸ்ரீராம்.