Tamil Movie Ads News and Videos Portal

குலசாமி- விமர்சனம்

காமெடி செய்யும் விமல் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினால் என்னவாகும்? அதற்கான விடையை படத்தில் காணலாம்

கல்லூரி பெண்களின் வறுமை மற்றும் தேர்ச்சி ஆகியவற்றை பயன்படுத்தி பெண்களை தன்வசப்படுத்த முனையும் பேராசிரியை ஒருபக்கம், தன் தங்கையை பறிகொடுத்துவிட்டு வாழ்வை வெறுத்து வாழும் விமல் ஒரு பக்கம், பெண்களுக்கு எதிராக குற்றச்செயல் புரிபவர்கள் வரிசையாக கொல்லப்படும் சம்பவங்கள் ஒருபுறம் என கன்னாபின்னாவென கதை நகர்கிறது. முடிவில் நம் மனநிலை என்னானது? என்று கேட்டால்… அதற்கு படம் பதில் சொல்லும்

குடிகாரராகவும் ரகசியமாக சில ஆபரேசன் செய்பவராகவும் விமல் நடித்துள்ளார். படத்தில் மொத்தம் பத்து ஷாட்களில் மட்டும் தான் சிரித்துள்ளார். மற்றபடி படத்தில் மொத்தமும் சித்தம் கலங்கிய நிலையிலே நடித்துள்ளார். பெரிதாக எந்த அதிர்வையும் ஏற்படுத்தாத விமலின் நடிப்பில் துடிப்பே இல்லை. நாயகி தான்யாஹோப் ஏனோ தானோ கேரக்டரில் ஏனோ தானோவென நடித்துள்ளார். போஸ் வெங்கட் கேரக்டரை விட இன்ஸ்பெக்டராக வரும் முத்துப்பாண்டி நன்றாக நடித்து கவனிக்க வைத்துள்ளார். நடிப்பு எனும் பெயரில் சில வீக்கான வில்லன்கள் ஒருபுறம் படுத்தியெடுக்க, வீக்கான திரைக்கதை இன்னும் படுத்தியெடுக்கிறது.

பின்னணி இசை தரும் இம்சை பெரும் வதை. RR என்ற பெயரில் இசைஞர் அடித்துள்ள இசை ஒவ்வொரு சீன்களிலும் சாட்டையடி. கேமரா வொர்க்கும் அத்தனை சிறப்பாக அமையவில்லை. எடிட்டிங்கில் நேர்த்தி கூடி வரவில்லை. சவுண்ட் எபெக்ட், டப்பிங் லிப்சிங் என டெக்னிக்கலாகவும் படத்தில் நிறைய குறைகள்

பெண்களை படிக்க விடுங்கள், பெண்களின் இயலாமை சார்ந்த விசயங்களை வைத்து அவர்கள் வாழ்வைச் சிதைக்காதீர்கள் என்பதைச் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் அதைச் சரியான நேர்கோட்டில் சொல்லத் தவறியிருக்கிறார். இன்னும் முழுச்சிரத்தை எடுத்து உழைத்திருந்தால் குலசாமி ரசிகர்களை காப்பாற்றியிருப்பார்
2/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Kulasami #குலசாமி