Tamil Movie Ads News and Videos Portal

விதார்த்தைக் காக்க வைத்து கஷ்டப்படுத்திய- அருள் செழியன்!

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில்,  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது,

“ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணேன். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை. மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டேன். அப்போ அவர் எனது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தேன். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார். விதார்த், மிகச் சிறந்த மனிதராக இருக்கிறார். யோகிபாபுவின் தேதி கிடைக்காததால், அவரது  போர்ஷனை முதலில் முடிச்சோம். விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.

இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.

வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, ‘ஏ! சிரிப்பழகி’ பாட்டை, ‘எனக்கு வேணும்’னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”

குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.