Tamil Movie Ads News and Videos Portal

குடும்ப சூத்திரம்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

சில வருடங்களுக்கு முன்பு மறைந்த PPஸ்ரீனிவாஸ் அய்யா முன்னாடி ஆசான் கண்ணதாசன் பற்றி ஒரு கவியரங்கம்…

“கண்ணதாசன் வரிகள் ஒருவனை முதல் இரவுக்கும் அழைக்கும்..முழு துறவுக்கும் அழைக்கும்” என்று துவங்கி இரண்டு பக்கத்திற்குப் பேசினேன்…இடையில் ஸ்ரீனிவாஸ் அய்யாப் பற்றிப் பேசும்போது,

“இந்தத் தள்ளாத வயதிலும் இவர் பொல்லாத இளைஞர்” என்றேன்

உடனே என்னிடம் மைக்கை வாங்கி, “நான் பொல்லாத இளைஞர் தான். ஆனா தள்ளாத வயதுல்ல” என்று பேசி அந்த அரங்கத்தைக் கலகலப்பாக்கினார். தொடர்ந்து அடியேன் கண்ணதாசன் மீதுள்ள காதலை வெளிப்படுத்த அவரும் அதை ஆமோதித்தார்..

“சிவப்புக்கல் மூக்குத்தி, அவள் ஒரு இந்துப்பெண், அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன் கவிதைகள், வனவாசம், மனவாசம், ஏசு காவியம் என கண்ணதாசனை அள்ளி அள்ளி வாசித்த அனுபவம் உண்டு. ரொம்ப நாளுக்குப் பின் இந்தக் கொரோனோ செயலால் புத்தகங்களுக்கு மத்தியில் கண்ணதாசனின் இந்த புக் கிடைத்தது. ஐய் ஆசான் என அள்ளி வாசிக்கத் துவங்கினேன்..

வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம், ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய மதனநூல், காம நூல்களை தொகுத்து பெரிய திரட்டாக வெளியிட்ட நூலில் இருந்து மகாகுணபாடம் என்ற பகுதி, இவற்றில் உள்ள முக்கியமான ” மேட்டர்” பகுதிகளை எல்லாம் தொகுத்து தலைவர் கண்ணதாசன் இந்த நூலை எழுதியுள்ளார். முதல் முப்பது பக்கம் அவ்ளோ மஜாவாக இருந்தது நூல். மஜா என்றால் கிளுகிளுப்பாக இருப்பதை சொல்லவில்லை. நிஜமாகவே இல்லற வாசிகளுக்கான “வசிய ஞானம்” அதில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது..

“சுக்கிலம் அதுதான் ஆண்மை சுரப்பது
சுரதம் அதுதான் பெண்மை சுரப்பது
இரண்டும் ஒன்றாய் இணையும் சுகமே
இல்லற சுகமாய் இயற்கை வைத்தது..
வாலிபன் தீர்த்தம் வளரும் பொழுதே
மங்கையின் தீர்த்தமும் வருமேயானால்
சமசுகம் என்று சாற்றுவர் பெரியோர்..

இது சும்மா சாம்பிள்! இப்படி நிறைய அசத்தி இருக்கிறார். இருவரின் இன்பம் சமமானால் தான் அது காமம் இல்லையானால் துரோகம்.

ஆனால்
30 பக்கத்துக்குப் பிறகு வர்ற 34 பக்கங்களிலும் ஆசான் ஏகப்பட்ட பஞ்சாயத்தை இழுத்து வச்சிருக்காரு. பெண்களைத் துளியளவும் மதிச்சா மாதிரியே தெரியல. ஒரு ஆண் எப்படியான பெண்களை தேர்ந்தெடுக்கணும்னு பெண்களோட நட்சத்திரங்களை வைத்து விளக்கி இருப்பதை எல்லாம் ஜீரணிக்கவே முடியல…இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண் இப்படித்தான் இருப்பாள் என்ற தத்துவங்களை எல்லாம் ஜாதக ரீதியாக அடுக்கி இருக்கிறார். மருந்துக்கும் கூட பெண்கள் மேல் பொதுப்பார்வை காட்டவில்லை..புத்தகத்திற்குப் பெயர் குடும்ப சூத்திரம். குடும்பம்னா அங்கே பெண்களுக்கும் இடமுண்டு தானே? ம்ஹும்..

பஞ்சாங்கம் புராணம்னு நிறைய புருடாக்களை பயங்கரமாக பக்கத்தில் இருந்தவர் ஊத்திக்கொடுத்துக் கொண்டே ஏத்திவிட தலைவன் எழுதித் தள்ளியிருக்காப்ல…1977-ல தான் முதல் பதிப்பு வந்திருக்கு…

பாடல்கள், கவிதைகள், தத்துவங்கள்னு யாராலும் ஈசியாக நெருங்க முடியாத ஆளுமை க.தா.

“நீங்கள் சாப்பிட்ட எச்சிலைத் தான் நாங்கள் சாப்பிடுகிறோம்” என்ற தொனியில் சக தொழிலில் இருப்பவரைப் பாராட்டுவதை தங்கக்காசை செலவு செய்வது போல் செய்யும் வைரமுத்துவே கூட கண்ணதாசனைப் பற்றி ஒருமுறை கூறியதுண்டு. அப்படிப்பட்ட எம் ஆசான் இப்படி எழுதிட்டாரேனு ரெண்டு நாளா ஆதங்கமோ ஆதங்கம்….

இதுக்கு அவரே ஒரு விசயத்தையும் சொல்லிருக்கிறார்..

“நான் எழுதிய சில எழுத்துக்களைப் திரும்பிப் பார்க்கும் போது நாமா எழுதி இருக்கிறோம் என்று மலைக்கவும் வைக்கும்..இப்படி எல்லாம் எழுதி இருக்கோமே என்று வெட்கப்படவும் வைக்கும்”

மேட்டர் இதுதான்..ஆனா இதையே வேறு வார்த்தைகளில் கண்ணதாசன் சொல்லி இருந்தார்..அதனால் ஒருவேளை இப்போது கண்ணதாசன் இருந்து இந்த நூலை மறுபடி பார்த்தால் நிச்சயம் ்வெட்கப்பட்டிருப்பார்!