சீனுராமசாமி யுனிவர்ஸிலிருந்து மற்றொரு கண்ணீர் கதை
ஐஸ்வர்யா தத்தா தன் மிலிட்டிரி கணவன் ரியாஸ் வீட்டில் இல்லாத நாட்களில், இன்னொருவரை வர வைக்கிறார். இது மிலிட்டிரி கணவரான ரியாஸ்க்கு சொல்லப்பட, அவர் ஒருநாள் வந்து ஐஸ்வர்யா தத்தாவை கையும் களவுமாகப் பிடிக்கிறார். கணவன் ரியாஸிடமிருந்து தப்பி, தன் புதிய நட்போடு ஓடுகிறார் ஐஸ்வர்யா தத்தா. ஐஸ்வர்யா தத்தா ரியாஸ் தம்பதியின் இரு பிள்ளைகள் ஹீரோவான ஏகனும் அவரது தங்கை சத்யதேவியும் தனித்து விடப்படுகிறார்கள். யோகிபாபு ஆதரவில் வளரும் அவர்களின் வாழ்வில் நடக்கும் எமோஷ்னல் சம்பவங்கள் தான் படத்தின் கதை
கதையின் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார் ஏகன். கருப்பான தோற்றம், களையான முகம் என நல்ல தேர்வு ஹீரோ. எமோஷ்னல் காட்சிகளில் கூட சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு தன் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளார். ஹீரோவின் தங்கையா நடித்துள்ள சத்யதேவி ஆகச்சிறந்த தேர்வு. அருமையாக நடித்துள்ளார். ஹீரோவை லவ் பண்ணும் வழக்கமான ஹீரோயின் கேரக்டர் என்றாலும் பிரிகிடா சகா நன்றாகவே நடித்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா ஓகே ரகம். ரியாஸ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
படத்தை தாங்கி நிற்கிறது ரகுநந்தனின் இசை. பாடல் வரிகளை எழுதிய கவிஞர்களுக்கு வாழ்த்துகள். அருமையான வரிகள். பின்னணி இசையும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் தேனி ஏரியாவை இனிக்க இனிக்க படம்பிடித்திருக்கிறார்.
ரொம்ப எளிமையான கதையில் சில வலிமையான எமோஷ்னல் காட்சிகளை கோர்வையாக கோர்ப்பது தான் சீனுராமசாமி ஸ்டைல். இதிலும் அப்படியே இருந்தாலும் கோர்வை என்பது அநியாயத்திற்கு மிஸ். தி.மு.கவிடம் பாராட்டு வாங்குவதற்காக சில வசனங்களை வைத்த இயக்குநர், தேவையே இல்லாமல் கம்யூனிசத்தை படத்திற்குள் கொண்டு வந்து வீணடித்துள்ளார். லாஜிக்-ஐ விட்டுவிடலாம். போலித்தனமான எமோஷ்னல்ஸ் ரொம்பவே ஏமாற்றம்! கிட்னி கொடுப்பதை சட்னியை விட ஈசியாக டீல் செய்திருப்பதெல்லாம் ரசிகர்கள் மீது செய்யப்பட்ட ஆபரேசன். இவ்வளவு இருந்தும் ஒரே ஆறுதல், படம் பெரிதாக போரடிக்கவில்லை. எதோ சும்மா ஒரு கிராமத்து படம் பார்க்கணும் என்று நினைப்பவர்கள் கோழிப்பண்ணை பக்கம் போகலாம்
2.75/5
-மு ஜெகன் கவிராஜ்