“ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்பது புத்தரின் மொழி. “ஆசையது உங்களுக்கு என் மக்கா தோசமாக இருக்குதடா” என்பது அய்யா வைகுண்டர் வாக்கு. இப்படி ஆசை பற்றிய கருத்துக்களை முன்னோர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை கருத்தில் கொள்ளாமல் வாழும் மனிதர்களுக்கு ஆசை மூலம் வரும் இடர்களும் துன்பங்களும் நிறைய என்பதை மிக அழகாக விளக்குகிறது கொன்றால் பாவம் படம்
1981-ஆம் ஆண்டில் சந்தோஷ் பிரதாப் வெளியூரில் இருந்து பெரும் பணம் நகையோடு ஒரு கிராமத்திற்கு வருகிறார். அந்தக் கிராமத்தில் வறுமைக்கு வாக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது. அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரி ராவ், மகள் வரலெட்சுமி என அந்தக் குடும்பம் வயிற்றுப்பாட்டுக்கே படாதபாடு படுகிறது. அந்தக் குடும்பத்துக்குள் ஒருநாள் விருந்தினராக சந்தோஷ் பிரதாப் வருகிறார். அதன்பின் பல திருப்பங்கள் நடக்கின்றன. அந்தத் திருப்பங்கள் யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்? என்பதை மீதமுள்ள திரைக்கதை சொல்கிறது
தன்னால் இயன்ற அளவிற்கு இந்த கதைக்கும் களத்திற்கும் தன் நடிப்பால் நியாயம் சேர்த்துள்ளார் ஹீரோ சந்தோஷ் பிரதாப். ஒரே ஷாட்டில் சகலரையும் ஓரம் கட்டுகிறார் நடிகை ஈஸ்வரிராவ். என்னவொரு எதார்த்தமான நடிப்பு அவருடையது. மிக இயல்பாக ஒரு வறுமை நிறைந்த முதிர்கன்னியாக மனதில் நிறைகிறார் வரலெட்சுமி. தன் அனுபவம் மொத்தத்தையும் தேர்ந்த நடிப்பாக உருமாற்றி தந்துள்ளார் நடிகர் சார்லி. இந்த நான்கு கதாப்பாத்திரங்களும் ஒரு வீடும் தான் மொத்தப்படமும். சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட வேறு சில கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் யாருக்கும் பெரிதாக ஸ்கோப் இல்லை
சாம்.சி எஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் 1980 கால கட்டத்தை நம் கண் முன் நிறுத்த அயராது உழைத்துள்ளார். அவரது உழைப்பு நம்மை ரசிக்க வைக்கும் ப்ரேம்களில் தெரிகிறது
எடுத்தக்கொண்ட கதையை விட்டு இம்மி அளவும் நகராத திரைக்கதையால் நல்ல சினிமா பார்க்கும் அனுபவத்தை வழங்கியுள்ளார் இயக்குநர் தயாள் பத்மநாபன். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் கணிக்காத கோணத்தில் அமைத்தது மட்டுமின்றி, சொல்ல வந்த கருத்தை சம்மட்டியடியாக சொன்ன விதத்திலும் கொன்றால் பாவம் படம் ஒரு தேர்ந்த திரையனுபவத்தை தருகிறது
3.5/5