Tamil Movie Ads News and Videos Portal

குஷ்புவின் பதிலடி சரியா..???

நாட்டில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எது நடந்தாலும், அது குறித்து கருத்துக்கூற வேண்டிய இடத்திற்கு திரையுலக பிரபலங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். அதில் சிலர் திரையுலகு தவிர்த்து அரசியலிலும் இருப்பதால், அவர்களை நோக்கி கேள்விக்கணைகள் பாய்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடாத நடிகர் நடிகைகளிடம் இது குறித்த கருத்து கேட்கப்படுகிறது. இதில் பிழை ஏதும் இல்லை தான். ஆனால் இது போன்ற கேள்விகள் நடிகர் நடிகைகளிடம் கேட்கப்படும் போது அதை வெகுஜன மக்கள் எந்தமாதிரியான பார்வையில் பார்க்கிறார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான குஷ்பு குடியுரிமை

சட்டத்திருத்த மசோதா குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மற்றொரு நடிகையும் பா.ஜ.க ஆதரவாளருமான காயத்ரி ரகுராமிற்கும் குஷ்புவிற்கும் மோதல் இருந்து வந்தது. இவர்களுக்கு இடையில் உள்நுழைந்த ரசிகர் ஒருவர் குஷ்புவை நோக்கி, “அம்மா கூத்தாடி தாயே உனக்குத்தான் மும்பைச் சேரிப்பகுதியில் விலாசம் இருக்கிறதே.. அது உங்களின் பிறப்பிடம் தானே.. நீ உன் அப்பாவை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறியதால் உன் அப்பா உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று பயப்படுகிறாயா..? கவலைப்படாத, உன் அம்மாவும் அண்ணணும் ஏற்றுக் கொள்வார்கள்..” என்று அவர் தொழில் சார்ந்து அவரை இழிந்து பேசி பதிவிட்டிருந்தார். அது விளைவித்த கோபத்தில் உடனே சூடாக குஷ்புவும் “உன் அம்மா பேரு கூத்தாடி என்று தெரியப்படுத்தி இருப்பதற்கு நன்றி, உன் பெருந்தன்மை பிடித்திருக்கிறது..” என்று பதிலடி கொடுத்தார். இருப்பினும் வெகுஜன சமூகம் தான் அவர்களின் பொதுப்புத்தியில் இருந்து தான் கொண்டாடும், பூஜிக்கும் ஒரு கலையை ஒரு தொழிலை கேவலமாக புரிதலின்றி பேசுகிறது என்றால், குஷ்புவும் அப்படி பேசலாமா..? அவரும் கூத்தாடி என்ற சொல்லை கேவலமான ஒன்றாகத்தான் பார்க்கிறாரா..? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.