சிங்கிள் டீயில் கூட கதை இருக்குன்னு நம்புற கூட்டம் கோடம்பாக்கத்துல கூடிக்கிட்டே இருக்கு.. அதுல சில நல்லது உண்டு..அல்லதும் உண்டு! அந்த வகையில் இந்த கெழப்பய எப்படி? என ஒரு ரவுண்ட் வரலாம்
பின்னாடி வர்ற பழைய மொரிஸ் டாக்ஸியோட ஹார்ன் அடிக்கும் சவுண்ட் கேட்டும் முன்னாடி சைக்கிளில் போற தாத்தா வழிவிடாமல் செல்கிறார். ஏன் அவர் வழிவிட மறுக்கிறார்? என்ற கேள்விக்குப் பின்னால் சின்ன சஸ்பென்ஸ் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் யாழ் குணசேகரன்
கதையின் நாயகராக நடித்துள்ள கதிரேசகுமார் மிக இயல்பாக நடித்துள்ளார். அடி வாங்கும் போது எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். மேலும் நடித்துள்ள கிருஷ்ணகுமார், விஜயராணா தீரன், KN ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ஆனந்த்ராஜ் ஆகியோர் சில இடங்களில் தேவையான அளவும் சில இடங்களில் சற்று அதிகமாகவும் நடித்துள்ளனர்.
பின்னணி இசையை சர்வ நிச்சயமாக நல்ல விதமாக அமைத்திருக்க முடியும். ஏனோ இசை அமைப்பாளர் கெபி தவறவிட்டுள்ளார். அஜித்குமார் தன் ஒளிப்பதிவில் கதையின் இயல்பை பதிவு செய்துள்ளார்
ஒரே இடத்தில் இவ்வளவு நேரம் ஒரு கதையை கடத்துவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். வாழ்த்துகள் இயக்குநருக்கு! அதேசமயம் இதனால் தான் பெரியவர் காருக்கு வழிவிட மறுக்கிறார் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது. மேலும் ஒரு வயதான பெரியவரை இத்தனை பேர் சேர்ந்தும் அவரை ஓரமாக நிறுத்தி காரை நகர்த்த முடியவில்லை என்பதெல்லாம் காது நிறைய பூ!
சின்ன விசயத்தைக் கதையாக எடுத்தாலும், அதை கூடுமானவரை வித்தியாசமாகச் சொல்ல முனைந்த முயற்சிக்காக மட்டும் இந்தப் பெரியவரைப் பாராட்டலாம்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்