Tamil Movie Ads News and Videos Portal

கழுவேத்தி மூர்க்கன்- விமர்சனம்

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவனை இச்சமூகம் எப்படி பயன்படுத்தி துன்புறுத்தியது என்பதை சமகால அரசியல் அம்சங்களோடு பேசியிருக்கும் படமே கழுவேத்தி மூர்க்கன்

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குப்பட்டியில் மேலத்தெரு கீழத்தெருவில் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அதில் கீழத்தெருவைச் சேர்ந்த சந்தோஷ் பிரதாப்பும், மேலத்தெருவைச் சேர்ந்த அருள்நிதியும் நண்பர்கள். இனவேறுபாடுகளை துறந்த நண்பர்களான அவர்களுக்குள் பிரிவினையை வர வைக்கும் சதி நடக்கிறது. அந்தச் சதியின் முடிவு என்ன என்பதே மீதிக்கதை

அருள்நிதி அளவோடு தான் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அவர் முகத்தில் மூர்க்கத்தனம் வெளிப்பட்ட அளவிற்கு காதல் காட்சிகளில் குறும்புத்தனம் வெளிப்படவில்லை. நாயகி துஷாரா விஜயன் தன் கேரக்டருக்கு பக்காவாக நியாயம் சேர்த்துள்ளார். இந்தப் படத்தில் தன் கேரக்டரை மிகச்சரியாக உள்வாங்கி அசத்தியுள்ளா சந்தோஷ் பிரதாப். கொஞ்சம் பிசகினாலும் மிகையான நடிப்பு தெரிந்துவிடும் கேரக்டர். அதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். முனிஷ்காந்த் கேரக்டரும் நச் ரகம். யார் கண்ணன் நீண்ட நாட்களுக்குப் பிறகு வலுவான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனும் வில்லன் டீமும் நாம் பல படங்களில் பார்த்த கேரக்டர் வடிவங்கள் தான் என்பதால் மனதில் ஒட்டவில்லை

டி.இமானின் பின்னணி இசையில் விஸ்வாசம் தூக்குதுரைக்கு போட்ட எக்ஸ்ட்ரா பிட்டுகளை எல்லாம் இதில் கோர்த்திருக்கிறார் போல. பெரிதாக ஈர்க்கவில்லை. பாடல்களிலும் என்கேஜிங் மிஸ்ஸிங். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு ராமநாதபுரத்தின் வறண்ட நிலப்பரப்பை கண்முன் நிறுத்துகிறது.

எந்தச் சாதியாக இருந்தாலும் அந்தந்தச் சாதியை கெடுப்பதற்கு என்று சம்பந்தப்பட்ட சாதிக்காரனே காய்களை நகர்த்துவான் என்பதை நறுக்கென சொல்லியிருக்கிறார் இயக்குநர் கெளதம ராஜ். இந்தந்தக் கேரக்டர் இன்னார் இன்னார் தான் என்பதை மிகச்சரியாக காட்சிப்படுத்தி, அந்தக் காட்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் விதமாக எந்தப்பக்கமும் சாயாமல் நடுப்பக்கம் நின்று பேசியிருப்பது சிறப்பு. சாதி கெளரவம் எனும் போலியான மேனாமினிக்கித் தனத்தை வளர்த்து அதில் குளிர் காயும் அரசியல் வாதிகளையும் சாடியிருக்கிறது படம். இப்படியான சம்மட்டியடி அரசியல் படத்தில் இருந்தாலும் திரைக்கதையில் அநியாயத்திற்கு சறுக்கியுள்ளார் இயக்குநர். ஸ்டோரி நரேட்டிங்கில் ஏகப்பட்ட தடுமாற்றம். ஆங்காங்கே சில எக்ஸ்ட்ரா திணிப்புகளும் சலிப்பைத் தருகின்றன. ஒரு கொலைக் குற்றாவாளி சீமக்கருவேல மரக்கூட்டத்தில் சாவகாசமாக இருந்து டிபன் டின்னர் சாப்பிடுவதெல்லாம் எந்த ஊர் நியாயம்? படத்தின் பலம் சாதி அரசியல் என்றால் படத்தின் பலவீனம் எளிதாக யூகிக்க முடியும் திருப்பங்கள் தான். கழுவேத்தி மூர்க்கனை இன்னும் செம்மைப்படுத்தியிருந்தால் அவன் நம்மை கவர்ந்திருக்கவே செய்வான்.
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்

#KazhuvethiMoorkan #கழுவேத்திமூர்க்கன்