அறம் பேசாத அதிகாரம் மனித சமூகத்திற்கு எதிரானது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். இந்தப்படத்தின் டைட்டிலுக்கும் படத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் அவ்வளவு முரண் இருக்கின்றன. அந்த முரண் தான் இங்கு நடைமுறை என்பதே இப்படம் சொல்லும் சாராம்சம்.
ஆர்.டி.எம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பாஸ்கரன், ராஜபாண்டியன், சுரேஷ்ரவி ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். இவர்களின் சுரேஷ் ரவி இப்படத்தின் ஹீரோவும் கூட. இப்படியான படங்களை தயாரிப்பது ஒரு வீரம் என்றால் இப்படியான படங்களைப் பார்த்து ஊக்குவிப்பது தான் நாம் தமிழ்சினிமாவிற்குச் செய்யும் கெளரவம். இந்தக் கெளரவத்திற்குப் பாத்தியப்பட்டவர்கள் படத்தை வாங்கி வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயனும் படத்தை பெருமையோடு வழங்கும் இயக்குநர் வெற்றிமாறனும்.
காதல் மனைவியோடு நிம்மதியாக வாழ்ந்து வரும் ஹீரோவிற்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்பது கனவு. அந்தக்கனவை கலைக்கும் விதமாக ஹீரோ வாழ்வில் குறுக்கிடுகிறது காவல்துறை. நண்பன் என்று பொதுவெளியில் பறை சாற்றப்படும் காவல்துறை ஹீரோவின் கனவு வாழ்வை என்ன செய்தது என்பதே படத்தின் கதை.
நறுக்குத்தெறித்தாற் போன்ற நேர்த்தியான கதை சொல்லல், நேர்மையான வசனங்கள், சில சில இடங்களில் எதிர்பாராத ட்விஸ்ட் என படத்தின் இயக்குநருக்கு ஒரு கன்டென்ட் சினிமாவை கூட கமர்சியல் டேஸ்டோடு அணுகும் லாவகம் தெரிந்திருக்கிறது. சிறப்பு!
ஹீரோ சுரேஷ் ரவிக்கு இதுமுதல் படம் என்பதால் மன்னித்து விடலாம். இனிவரும் காலங்களில் அவர் நல்ல நடிப்பை வழங்குவார் என நம்பலாம். அந்த நம்பிக்கையை சில இடங்களில் தருகிறார். ஹீரோயினாக வரும் ரவீனா ரவி மனதில் பதிகிறார். ஆனால் முதன்மைப் பாத்திரங்களான இவர்களை எல்லாம் ஈசியாக ஓவர்டேக் செய்து ஸ்கிரீனை மொத்தமாக ஆஃகுபை செய்துவிடுகிறார் மைம்கோபி. அவர் அடிக்குற அடிகளும் செய்கிற செயல்களும் தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவங்களை நினைவூட்டுகிறது. மிகச்சிறந்த பாத்திர வார்ப்பு. கங்ராட்ஸ் மைம்கோபி!
ஆதித்தியா சூரியா இருவரின் இசையும் படம் உணர்த்தும் அதிர்வுகளை நமக்குள் கடத்துகிறது. K.S. விஷ்ணு ஸ்ரீ யின் ஒளிப்பதிவும் தரம்.
தவறே இல்லாவிட்டாலும் காவலரின் ஈகோவை டச் செய்து விட்டு ஒரு சாமானியன் காவல்நிலையம் சென்றால் அவனின் எதிர்காலம் என்னாகும்? என்பதை மிக கனமாகச் சொல்லிப் பயமுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் பயமுறுத்துவது மட்டுமல்ல படத்தின் நோக்கம். இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதன் மூலமாக இப்படியெல்லாம் இருக்காதீர்கள் என்பதை உணர்த்துவதே படத்தின் நோக்கம்.
சிறையில் ஹீரோவை அடித்துத் துவைத்துவிட்டு தானே அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் ஒரு போலீஸ் பதிவிடுவாரா? என்ற லாஜிக் படம் பார்க்கும் போது எழுந்தாலும் அரசியல் மட்டம் அதிகார மட்டம் வரை நேரடித் தொடர்பில் உள்ள போலீஸ் எதையும் செய்வார்கள் என்பதே இங்கு எதார்த்தம் என்பதால் அதை மறந்துவிடலாம்.
முன்பாதியில் சிற்சில இடங்களில் எடிட்டர் கத்தரியைப் போட்டிருக்கலாம். உண்மைச் சம்பவத்தில் இருந்து மிகச்சிறந்த கதையை உருவாக்கியவர்கள் திரைக்கதையில் இன்னும் கூட தீவிர தேடுதலையும் விசாரணையும் மேற்கொண்டிருந்தால் படத்தில் தீப்பொறி பறந்திருக்கும். இருப்பினும் இது சிறுபொறியே என்றாலும் நாம் வரவேற்றே ஆக வேண்டிய படமிது!
-மு.ஜெகன்சேட்