தத்துவத்தைப் பேசும் நூல்கள் ஒருவகை. தத்துவத்தைப் பேச வைக்கும் நூல்கள் ஒருவகை. காதுகள் இரண்டாம் வகை நூல்
மகாலிங்கம் என்ற மனிதனின் வாழ்க்கை தான் நாவலின் கதை. ஒரு பெரும் செல்வந்தனாக வாழ்ந்து, மிகுந்த கடவுள் நம்பிக்கையில் விழுந்து, 35 வயதுக்குப் பின் வீழ்ந்து போகும் மகாலிங்கத்தின் காதுக்குள் சில குரல்கள் கேட்கின்றன. (மாவீரன் படத்திற்கு இந்த நூல் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம்) மகாலிங்கம் எனும் மாலிக்குள் கேட்கும் குரல்கள் அவனை தடுமாற வைக்கின்றன. சிலநேரம் திடமாக முடிவெடுக்க வைக்கின்றன. காதுக்குள் கேட்கும் குரல்கள் அசிங்கத்தை, அழுகைய என எல்லாவற்றையும் பேசுகின்றன. ஒரு கட்டத்தில் காதுகளைத் தாண்டி அந்தக் குரல்கள் உதட்டிற்கு வந்துவிடுகின்றன.
உதட்டிற்குள் இருந்து பேசும் குரல்கள் தங்களை யாரென்று சொல்கின்றன. ஒரு குரல் காவல்தெய்வம் கறுப்பன். மறுகுரல் காஸ்ட்லி தெய்வம் ராமன். வறுமையின் பிடியில் மாலி சிக்கி சின்னபின்னமாகி கிடக்கும் வேளையில் மாலிக்கு ஒரு நல்ல வாய்ப்பு சுந்தரம் என்பவன் மூலமாக வருகிறது. கீழ் உதட்டில் இருக்கும் ராமன் அந்த வாய்ப்பை சமரசம் பண்ணியேனும் தக்க வைத்துக்கொள் என்கிறான். மேல் உதட்டில் இருக்கும் கறுப்பன் கறாராக இரு என்கிறான். முடமாகி போன பொண்டாட்டி, கால் வயிற்றுக் கஞ்சியோடு வாடும் பிள்ளைகள் சூழ இருந்தும் மாலி எதிர்பாராத முடிவை எடுக்கிறான். நாவலின் இறுதி கட்டத்திற்குள் வரும் இந்த போர்ஷன் மனதை என்னவோ செய்யும்.
ஒரு கட்டத்தில் மாலிக்கு குரல்கள் எண்ணங்களாக உருமாற்றம் அடைந்து இருக்கும் மகளை இறந்ததாக எண்ண வைக்கிறது. பின் எண்ணங்களின் நொடிநேர மாற்றங்கள் அவனுக்கு ஒரு தத்துவத்தை திறந்து வைக்கிறது. சுடுகாட்டில் இறந்து போன பிணங்களை எல்லாம் தான் தான் என எண்ணுகிறான் மாலி. வாழ்பவனோடு தன்னை ஒப்பிடுபவன் மனிதன். இறந்தவனோடு தன்னை ஒப்பிடுபவன் ஞானி!
வாழ்வில் மனிதன் ஆயிரம் இலக்குகளை தன் இஷ்டத்திற்கு நிர்ணயக்கலாம். அவன்
இஷ்டப்படாவிட்டாலும் அவன் அடையவிருக்கிற இலக்கு ஒன்றுண்டு! அந்த நிரந்தர இலக்கின் நினைவுகள் கொண்டவன் நிகழ்கால நாடகத்தில் எளிதாக நடித்து விடுவான்.
எம்.வி.வெங்கட்ராம் எழுத்தை இப்போது தான் வாசிக்கிறேன். காவிரியின் மைந்தன் எழுத்தால் செழித்து இறந்திருக்கிறார் வந்தனம் அய்யா🙏
அடியேன் சிறு வாசிப்பில் பொக்கிஷம் என கொள்ள வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று💫
இந்த நூலின் முன்னுரையில் பிரபஞ்சன் சொல்லியிருக்கிறார், 👇
“தமிழ் நாவல் சரிதத்தில் இது ஒரு முக்கியமான, வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை” ❤️