எதார்த்த சினிமாவில் கமர்சியல் கலந்தால் எதார்த்தம் மிஸ் ஆகும். கதிரில் அந்தக் குழப்பம் சிறிதாக இருந்தாலும் படத்தின் முடிவு தெளிவாக இருக்கிறது..ரைட்! கதைக்கு வருவோம்
நாயகன் வெங்கடேஷ் ஊரில் நண்பர்களோடு ஜாலியாக சுற்றும் கேரக்டர். ஒரு பிரச்சனை காரணமாக சென்னைக்குச் செல்கிறார். அங்கும் அவரை ஓர் பழைய நினைவு துரத்த மீண்டும் ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு ஒரு இழப்பு ஏற்பட, இனி எதிர்காலத்தை சரியாக தீர்மானிக்க முடிவெடுத்து ஒரு செயலை முன்னெடுக்கிறார். அச்செயல் வென்றதா என்பதே கதிரின் கதை!
வெங்கடேஷ் எதார்த்த நடிப்பால் ஈர்க்கிறார். ப்ளாஸ்பேக் போர்ஷனில் வரும் பிரதாப் சந்தோஷும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். ஏனைய கேரக்டர்களும் ஏமாற்றம் அளிக்கவில்லை.
ஒளிப்பதிவு பின்னணி இசை எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப டீம் பெரிதாக குறை வைக்கவில்லை.
கதிர் படத்தின் திரைக்கதையில் உள்ள சிறு பிரச்சனையே ஒரு ஜாலி படமாக துவங்கி, காதல் படமாக மாறி, சோகபடமாக சுருண்டு, புரட்சி படமாக வெகுண்டு, விவசாய படமாக திரண்டு, கடைசியில் மோட்டிவேசன் படமாக முடிகிறது. இந்தச் சிக்கல் நிறைந்த திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சரி செய்திருந்தால் கதிர் கலக்கலாக ஈர்த்திருப்பான்..
ஆனாலும்…
படத்தில் கீழ்வெண்மணியில் கூலித்தொழிலாளர்களுக்கு நடந்த கொடுமையை பதிவு செய்தமைக்காகவும், பொருளை விளைவித்தவனுக்குத் தான் பெரிய லாபம் செல்ல வேண்டும் என்ற பாட்டாளி மன சிந்தனைக்காகவும் கதிரை ஒருமுறை காணலாம்
-மு.ஜெகன் கவிராஜ்