Tamil Movie Ads News and Videos Portal

கர்ணன்- விமர்சனம்

- Advertisement -

“மாடசாமி மவனுக்கு எப்படில துரியோதனன்னு பேரு வந்தது?” என்று கேட்கிறான் அதிகாரன். இந்தக் கேள்விக்கான பதிலை கர்ணன் வாளேந்தி தான் சொல்ல வேண்டியிருக்கிறது.அவன் அடிச்சிருவான்னு ஒதுங்கிப்போற வரைக்கும் ஒன்னுக்குப் போறதுக்கும் அவனைத் தான் சாடிக்கிட்டு நிக்கணும். சில அடக்குமுறையை நிறுத்தி வைக்கணும்னா திருப்பி அடிக்கிறது தான் சரி என்று பேசுகிறான் கர்ணன். அந்த திருப்பி அடி பார்முலா எத்தகைய வலி மிகுந்தது என்பதையும் சொல்லத் தவறவில்லை!

நெல்லை நேட்டிவிட்டியை இத்தனை நேர்மையோடு பதிவு செய்திருப்பதில் காட்சிவழி நாயகனாக மாரிசெல்வராஜ் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.90 காலகட்டத்தில் இருந்த வீடுகள், மளிகைக்கடை, அப்பளப்பொறி, தளபதி படம் போட்ட டிசர்ட், டிராக்டர், பொம்பளையாட்களின் காஸ்ட்யூம்ஸ், தனுஷ் உடுத்துற சாரம்(லுங்கி) எல்லாம் பக்கா.தேனீ ஈஸ்வரரும் சந்தோஷ் நாராயணனும் போட்டிப்போட்டு உழைச்சிருக்காங்க.

கிழவி சேலை முந்தில இருந்து மஞ்சனத்தி புருசன் 10 ரூபாயை தெரியாம உருவுறதும், கெழவி அதைக்கண்டு பிடிச்சி அந்தப் பத்து ரூபாய்க்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போன்னு சொல்றதும் பேரன்புக் கவிதை..(படத்தில் ரொம்ப பிடிச்ச காட்சி) ஈக்குவாலிட்டி பேசுற படங்கள் வசனத்தாலே நம்மை வச்சி செய்யும். ஆனால் மாரி காட்சிமொழியாலே பெரிய பெரிய உணர்வுகளை அசால்டாக கடத்தியிருக்கிறார். அசாத்தியம்!

“ச….யக்குடில சடங்கு வீட்டு ரேடியா கட்டுனா கூட…ஊருக்குள்ள இருக்க அதிகார தெருவுவளுக்கு கசக்கும். அப்படித்தான் இருந்தது ஊரு. இப்பம் கொஞ்சம் மாறுன மாதி தெரிஞ்சாலும் நெஞ்சில அந்த வஞ்சம் அப்படித்தான் கிடக்கு. கிடக்கும். அதை அப்பப்ப கூசிப்போகச் செய்ய இப்படியான படங்களும் பதிவும் தேவை. அந்த வகையில் கர்ணனை வரவேற்போம்!

ரைட்!

மத்தபடி ஒரு பக்கா சினிமா ரசிகனாக கர்ணன் எனக்கு முழு நிறைவைத் தரவில்லை. பரியேறும் பெருமாள்,அசுரன் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த தடுமாறுகிறது கர்ணன். படம் துவங்கிய 15-ஆம் நிமிடத்தில் வரவேண்டிய காட்சி இடைவேளையில் தான் வருகிறது..ஒரு நல்ல திரைக்கதையில் 2 காட்சியை உருவினாலும் கதை சரிந்துவிடும். கர்ணனில் 20 நிமிட படத்தைக் குறைத்தாலும் கதையில் பெரிய பாதிப்பு வராது என்பதே நிதர்சனம். கருத்தியிலாக கர்ணனின் வாள் வீரமானது தான். ஆனால் ஒரு காத்திரமான சினிமாவாக கர்ணன் அசுரபலத்தை காட்டவில்லை.

மத்தபடி படத்திற்கு நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதைப் பார்க்குங்கால் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.பட் எனக்கு அவ்வளவு பாசிட்டிவாக தெரியாதது வருத்தமாத்தான் இருக்கு..Very sorry.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.