1976-ல் வெளிவந்த நாவல்! உழைக்கும் அடிமை வர்க்கம் தன் அறியாமை உணர்ந்து எதிர்த்து குரல் கேட்கிறது, வழக்கம் போல் முதலாளி வர்க்கம் அவர்களின் குரலை ஒடுக்க முனைகிறது. ‘பாட்டாளிகளோட உழைப்பின் விளைச்சல் தான் முதலாளித்துவம்’ அதை ஒவ்வொரு உழைப்பாளியும் நெல்லை மாவட்டம் பெருமாள் புரம் என்ற கிராமத்தில் உணர்றான். ‘வாங்கித்திங்க வெங்கப்பயல்வ எப்படிய்யா குடுக்கவனை எதுக்க முடியும்?” என கேள்வி எழுப்புறார் அதே ஊரைச்சேர்ந்த நிலக்கிழார் சக்கரைச்சாமி. பெயர்ல சக்கரையும் செயல்ல விஷமும் உள்ள மனுசன். தன் மகன் ராமசாமி சிறுவனா இருக்கும் போது தான் பொண்டாட்டியோட தங்கச்சிய அவனுக்கு கட்டிவச்சிட்டு, கெழடு தட்டியும் மகன் பொண்டாட்டியோட பொழங்குற ஒரு வெளங்கா ஜென்மம் சக்கரைச்சாமி.
சக்கரைச்சாமி கொடுக்குற கூலியை கடவுள் போட்ற பிச்சையாக நினைக்கிதுக ஜனங்க. ஒன்னுரண்டு விதிவிலக்கு உண்டுன்னாலும் மெத்த ஜனமும் முதலாளி காட்டுத பொய்யான சித்த நம்பித்தான் வாழ்துவ.
இப்படியான ஊருக்குள்ள வாத்தியாரா வர்றான் கண்ணப்பன். ஊருக்குள்ள ஒரு படிப்பகத்தை உருவாக்குறான். சக்கரைச் சாமிட்ட வாழ்வுக்கூலியா இருக்குற வீரையனுக்கு முதல்ல அறிவை ஊட்டுறான் கண்ணப்பன். வாத்தி சொன்னதே வேதவாக்குன்னு வீரையன் தன் மக்க உழைப்போட அருமையும் , அதுக்கு முதலாளி செய்ற கொடுமையையும் உணர்றான். வில்லங்கம் வெடிக்கத் துவங்குது. இதுக்குப் பிறவு நெருப்பு மேல நடக்குது கதை
சக்கரைச்சாமியோட ஆளுகையில இருக்குற அந்த இளம்பெண்ணை கண்ணப்பன் காதலோட கரையேத்துற இடமும், பொண்டாட்டின்னா என்னன்னே தெரியாத சின்னப்பயன் ராமசாமியை கண்ணப்பன் எதிர்கொள்கிற இடமும் க்ளாஸிக்!
‘நமக்கு அடிமைப்பட்டவன் எதுத்து கேட்காதவரைக்கும் அவன் முதுகைத் தடவணும். எதுத்துட்டா முதுகெழும்பை உடைக்கணும்’ இன்னைக்கு வரைக்குமே முதலாளித்துவம் இதை சூசகமா செஞ்சிட்டு வருது. அதற்கு துணையா அரசும் அதிகாரமும் கூடவே இருக்கு. அதையும் மீறி சில திறப்புகள் உருவாகத்தான் செய்யுது. ஆனா அதற்கு நாம கொடுக்குற விலை அதிகம். இந்தக் கரிசல் மண்ணுல அப்படி வாழ்வை இழந்தவக நிறைய. வலிச்சாலும் பரவாயில்லன்னு நாம மோதாம விட்டோம்னா..நம்மளை வழிச்சி நக்கிட்டு போயிருவான்வ. அப்படித்தான் பெருமாள் புரத்துல அடிகளையும் நெருப்பு வைத்தலையும் மீறி விவசாய சங்கம் உருவெடுக்குது. நல்ல பாசிட்டிவ் way
கண்ணப்பன், பொன்னி, மூக்காயி, வீரம்மா, மாரியம்மா, சக்கரைச் சாமி, வீரையன், பட்டாளத்துக்காரர், ராமசாமி, கொண்டப்பன், ரங்கண்ணன், நாண்டுக்கிட்டு நின்னு செத்துப்போற ரங்கண்ணன் பொண்டாட்டின்னு இந்த நாவல்ல வர்ற மனுசங்க கொணமும் மனமும் மண்மனம் மாறாம பதிவு செய்யப்பட்டிருக்காங்க. முழுக்கவும் கம்னியூஸ்ட் சாயலோட உள்ளநாவல் தான். எப்படி ஆராய்ஞ்சாலும் கதையோட சாரத்துல உண்மை கொட்டிக்கிடக்கு
தெளிவான அரசியலும், கச்சிதமான உளவியலும், அழகான இலக்கியமும் கலந்த கரிசல் என் வாசிப்பு சேகரிப்பில் மற்றொரு பொக்கிசம்.