மொழி மாறியிருந்தாலும், கலாச்சாரம் வேறாக இருந்தாலும் நல்ல படைப்பை மக்கள் கொண்டாடத்தவறுவதே இல்லை என்பதை சமீபத்தில் கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் உணர்த்தியிருக்கிறது. இப்படம் டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் வெளியாகியுள்ளது
18-ஆம் நூற்றாண்டில் மன நிம்மதி இழந்து தவிக்கும் அரசர் ஓர் காட்டு கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு வாழும் மக்கள் வழிபடும் ஒரு கற்சிலையை அரசர் கேட்கிறார். அதற்குச் சமானமாய் அரசரின் நிலங்களை அம்மக்கள் கேட்க, அரசரும் நிலம் தருகிறார். காலம் கடக்கிறது. 1970&90 கால கட்டத்தில் நிலம் கொடுத்த அரசரின் வாரிசுகள் வந்து அம்மக்களின் நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறார்கள். மக்களில் ஒருவராக இருக்கும் ஹீரோ ரிசாப் ஷெட்டி அதை எப்படி முறியடிக்கிறார் என்பதே காந்தாரா கதை
நடிப்பு இயக்கம் என இரட்டைச் சவாரி செய்து இரண்டிலுமே பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ரிசாப் ஷெட்டி. அடிக்கும் அடியும், காட்டும் ரியாக்ஷன்களும் காட்டுத்தீ. காதல் காட்சிகளில் மட்டும் அவர் காட்டுப்பூ. நாயகிக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. எல்லாமே காதலிக்கிற சின்னவேலை தான்..ஹி ஹி! ஹீரோவிற்கு அடுத்து கவனம் ஈர்ப்பது நம்மூர் கிஷோர் தான். காட்டிலகா அதிகாரியாக அவர் அழகாக கவனம் ஈர்க்கிறார். வில்லனாக அச்யுத் அசத்தியுள்ளார். அவரது குணாம்சம் மிகச்சிறப்பாக வார்க்கப்பட்டிருக்கிறது
ஒரு நல்ல படத்திற்கு தேவையான எல்லா உழைப்பையும் இசை அமைப்பாளர்,ஒளிப்பதிவாளர் ஆர்ட் டைரக்டர் உள்பட எல்லா டெக்னிஷியன்களும் வழங்கியிருக்கிறார்கள்
மாயம் நிறைந்த புனைவு என்றாலும் அதில் மனித எமோஷ்னலை சரியாக கோர்த்து விட்டால் அப்படம் மக்கள் மனம் தொடும் என்பதை கோடிக்கான மக்களின் மனங்களைத் தொட்டுச் சொல்லியிருக்கிறது இந்தக்காந்தாரா
4/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Kantara #காந்தாரா