திருமணம் சார்ந்து வெவ்வேறு பிரச்சனைகள் கொண்ட நான்கு பெண்களின் கதை
அம்மு அபிராமிக்கு அவரது அம்மாவே வரும் வரன்களை எல்லாம் தட்டிவிடுகிறார். வித்யா பிரதீப் தன் கணவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டில் சிக்கி அதிலிருந்து மீள முயற்சிக்கிறார். லிவிங் lifeல் இருக்கும் ஷாலின் ஸோயா திருமணத்தை வெறுக்கும் பெண்ணாக சமூகத்தை எதிர்கொள்கிறார். கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு முன்பே உருப்பெற்ற தன் கர்ப்பத்தை கலைக்க முயல்கிறார். இந்த நான்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளுமே படத்தின் கதை
நடிப்பு தான் இந்தப் படத்தின் ஆதாரம் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர் அனைவரும். அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன், ஷாலின் ஸோயா இவர்கள் நல்ல நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளனர். வெற்றி.எம், அதேஷ் சுதாகர் இருவரின் நடிப்பும் எதார்த்தம் மீறாமல் அமைந்துள்ளது ஆறுதல்
ராம்ஜியின் ஒளிப்பதிவு கதை மாந்தர்களின் வாழ்விடங்களை இயல்பு மீறாமல் காட்டுகிறது. ஷான் ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் சிறப்பம்சம்
நான்கு கதைகளையும் வெவ்வேறு படம் போல ட்ரீட் செய்யாமல் ஒரே உணர்வுக்குள் குவித்திருப்பது புத்திசாலித்தனம். படம் பார்க்கும் ரசிகனின் ரசனையை மதித்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். படத்தின் முன்பாதியில் அமைந்த ஒருங்கமைவை பின்பாதியிலும் கொண்டு வந்திருக்கலாம். மற்றபடி கண்ணகி காணக்கூடியவள் தான்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்