நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான நடிகர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதம் தொடர்பாக ஆதரவுக் குரலும் எதிர்ப்புக் குரலும் எழுந்து வருகிறது. நடிகையும், நடன இயக்குநரும், பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கமலின் கடிதம் குறித்து கூறி இருப்பதாவது, “நீங்கள் சீன பிரதமர் ஜின்பிங்கிற்கு ஏன் கடிதம் எழுதி கொரோனா தொடர்பான விசயங்களில் அவர்களின் நடவடிக்கை தோற்றுவிட்டதாக கூறவில்லை. ’தப்லிக் இ ஜமாத்திற்கு கடிதம் எழுதி ஏன் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டவில்லை. அரசின் உத்தரவை கடைபிடிக்காத மக்களுக்கு ஏன் நீங்கள் கடிதம் எழுதவில்லை.
தமிழக அரசும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் கொரோனா தொடர்பான முன்னெடுப்புகளில் தோற்றுவிட்டதாக கருதுகிறீர்களா..? நீங்கள் உங்கள் குறை எதுவாக இருந்தாலும் மாநில அரசுக்குத் தானே அதை தெரிவிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது. நேற்று எல்லோரும் தீப ஒளி ஏற்றி தங்கள் ஒற்றுமையை காட்டிய நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்று வருந்துகிறீர்களா..? நீங்கள் மத்திய மாநில அரசுகளின் கடுமையான முயற்சியை காண மறுக்கிறீர்கள். மேம்போக்கான கடிதங்களை எழுதாதீர்கள். உரிய தகவல்களோடு எழுதுங்கள்.” என்று கூறியிருக்கிறார்.