Tamil Movie Ads News and Videos Portal

பள்ளி மாணவராக கமல்ஹாசன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர். காலில் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ஓய்வில் இருந்து வரும் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டதால், படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தனது பள்ளிகால மாணவர்களை சந்திக்கும் ரீயூனியன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். சிறுவயதிலேயே நடிப்பு, நடனம், இயக்கம் என்று வந்துவிட்டதால் கமல்ஹாசன் கல்லூரி படிப்புக்கு செல்லவில்லை.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை 1970ம் ஆண்டில் முடித்தார் கமல்ஹாசன். அந்த மாணவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தற்போது நடந்ததிருக்கிறது. இதில் காக்கிப் பேண்ட், வெள்ளை சட்டையுடன் பள்ளி மாணவர்களைப் போல் கலந்து கொண்ட கமல்ஹாசனும் பிறரும் தாங்கள் படித்த வகுப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும் தங்களின் சார்பாக பள்ளிக்கு புரொஜெக்டர் ஒன்றையும் பரிசளித்தனர். இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், “நண்பர்காள், இன்றைய எனது சந்திப்பு என்னை சமநிலைப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்று; கற்ற கை மண்ணளவை தாய் மண் போல் காப்போம்; மகிழ்ந்தேன்; தெளிந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.