விஷுவலில் ஒரு பிரம்மாண்ட பாய்ச்சல்!
சுமார் 850 வருடங்களுக்குப் பிறகு நம் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனை கதையில் மஹாபாரத்தின் கேரக்டரையும், கீதையில், “அதர்மம் தலைதூக்கி, தர்மம் தலை குனியும் போது நான் அவதரிப்பேன்” என்ற கிருஷ்ணனின் வாக்கையும் மெயின் கதைக்குள் புகுத்தி திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின்
காசியில் மனிதர்கள் வாழ முடியாத சூழல் இருக்கிறது. காசிக்கு மேல் வானத்திற்கு கீழ் ஒரு உலகத்தைப் படைத்து சொகுசான வாழ்க்கை வாழ்கிறார் வில்லன் கமல். மேலும் அவர் பல பெண்களை செயற்கையாக கர்ப்பமாக்கி அந்த சிசு வளருமுன்பே அதன் சக்தி மற்றும் சத்துக்களை எடுத்து அப்பெண்களை கொலை செய்து விடுகிறார். இதற்கென ஒரு கேங்-ஐ வைத்துள்ளார். இப்படியான அதர்மங்கள் நடக்கும் போது கடவுள் வந்துதானே ஆகவேண்டும்?! அப்படி கடவுள் தீபிகா படுகோனே வயிற்றில் வளர, அவரை காப்பாற்றவும் நல்லுலகம் வரும் என்ற நம்பிக்கையிலும் ஒரு சாரர் மக்களெல்லாம் சாம்பாலா என்ற நிலத்தில் காத்திருக்கிறார்கள். காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் ஹீரோ பிரபாஸ், கடவுளை சுமக்கும் தீபிகா படுகோனோவை கமல் &கோவிடம் கொடுக்க முயல்கிறார். கடவுளின் வருகைக்காக காத்திருக்கும் சாகா வரம் பெற்ற அசுவத்தாமன் (அபிதாப் பச்சன்) பிரபாஸிடமிருந்து தீபிகாவை காப்பாற்ற போராடுகிறார். இதன் முடிவு என்ன என்பதைச் சொல்லாமல் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்து படம் நிறைவடைகிறது.
நடிகர்கள் வரிசைப்படிப் பார்த்தால் படத்தின் முதல் ஹீரோ அபிதாப் பச்சன் தான். அவர் வரும் இடங்கள் படத்தின் தவிர்க்கவியலாத தடங்கள். கமல் இரண்டே காட்சியில் வந்தாலும் கலக நாயகனாக நம் உலக நாயகன் அசத்தி விடுகிறார். பிரபாஸ் இப்பாகத்தில் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் போலவே தெரிகிறார். அவர் வரும் காட்சிகளை இன்னும் மெச்சூட்-ஆக எழுதியிருக்கலாம். தீபிகா படுகோன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். மேலும் பசுபதி, பிரம்மானந்தம், ஷோபனா, கேமியோ ரோலில் வரும் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் ஆகியோர் சின்னதாக ஈர்க்கிறார்கள்
படத்தில் அகசாய சூரர்களாக இருப்பவர்கள் டெக்னிஷியன்ஸ். வரைகலை படத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. துளி துளியாக மெனக்கெட்டு செதுக்கியுள்ளார். சி.ஜி சைட் எவ்வளவு இடம் விட வேண்டும், நாம் எவ்வளவு இடத்தில் புகுந்து விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து அட்டகாசப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். நம்மூர் சந்தோஷ் நாராயணன் தான் இசை. மனிதர் அசத்தியுள்ளார். குறிப்பாக அபிதாபிற்கு போட்டுள்ள பி.ஜி.எம் நெருப்பாக தெறிக்கிறது. விஷுவலாக நிச்சயமாக ஹாலிவுட்டிற்கு இணையானது இந்த கல்கி.
கதை ஆதிகால கதை என்றாலும் அதற்குள் நிகழ்காலம் தாண்டிய எதிர்கால மேஜிக்-ஐ புகுத்திருப்பது நல்ல ஐடியா. ஆனால் திரைக்கதையாக படம் எமோஷ்னல் ஏரியாவை தொடவே இல்லை. எமோஷ்னல் டச் என்பதை இன்னுமே வலிமையாகச் சேர்த்திருக்கலாம்.
இந்துத்துவ வாடை படத்தில் இருந்தாலும் பிற மதங்களை எங்குமே சீண்டவில்லை. படத்தின் டெக்னிக்கல் ஏரியாவை மிரள வைத்த அளவிற்கு திரைக்கதை மிரள வைக்காவிட்டாலும், நிச்சயமாக படம் என்சாய் பண்ண வைக்கும்.
இந்திய சினிமா அந்நிய சினிமாக்காரரை அன்னாந்து பார்க்க வைக்கும் அளவிற்கு சீறிப்பாய்கிறது. இதற்காகவேணும் படத்தை கண்டு ரசியுங்கள்
3/5
மு.ஜெகன் கவிராஜ்