தட்டிவிட்டா சும்மா குதுர மாதி ஓடணும் சிறுகதைவ. அந்த ஓட்டத்துல கிடைக்குற அனுபவங்க அழயும் வைக்கும். சிரிக்கயும் வைக்கும். காக்காம்பொன் சிறுகதைகள் அந்த ரகம்
கன்னியாகுமாரி நாகர்கோவில் ஏரியாவில் நாடார்கள் வாழ்க்கையை, அவங்களுக்குள்ள இருக்குற மத வேற்றுமையை, அன்பை, துரோகத்தை, போலியான கெளரவத்தை எல்லாம் பதனி போல எதமாகவும், பனை மரம் போல உறுதியாகவும் சொல்லுது இந்த நூல்
தென்னமரம் ஏறி விழுந்து செத்துட்டான் சாணான் ஒருத்தன். மகாசபை கூடுது. யாருக்கப் பேரைப் போட்டு அஞ்சலி ப்ளக்ஸ் அடிக்கதுன்னு டிஸ்கஸ் நடக்கு. இயேசு படம் தான் போடணும்னு நிக்கியான் ஒருத்தன். புலவர்னு ஒருத்தர் யேசு ஆட்க நீசப்பயல்வோ…அய்யா வைகுண்டர் படம் தான் போடணும்னு துள்ளுதாரு. அவங்களுக்குள்ள நடக்குற டிஸ்கசன் வழியே, அய்யா வழிக்கும் கிறிஸ்தவதுக்கும் இருந்த வரலாற்று வன்மமும் பகையும் வெளிப்படுது. செத்தவன் குடும்பத்தை அடுத்து எப்படி இண்டேற வைக்கதுங்க அறம்லாம் அந்த டிஸ்கசன்ல எடுபடுவே இல்லை. மதம் அறத்தைலாம் தாண்டியதாக்கும். அரசவம்சம் என்ற இந்த சிறுகதை ..👌👌
நன்றி மறக்குறதுன்றது மனிதர்களோட அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்று. நிச்சயமாக நமக்கு பிரச்சனை வராத நன்றியை மட்டும் தான் மனுசன் செய்வான்..இவன்கிட்ட இப்ப நன்றியைக் காட்டுனா நாம சமூகத்தால அவமானப்படுத்தப் படுவோம்னா நன்றியாவது மயிராவது. இப்படியான நெசம் ஒன்ன குமாரசெல்வா கதையாக்கி வச்சிருக்காரு
கூலிக்கி மாரடிச்சி ஒத்த தங்கச்சிய வளத்தெடுக்கான் அண்ணன் ஒருத்தன். அப்பன் ஆத்தா செத்ததால வாழ்க்க வறுமைக்கு வாக்கப்படுது. ஒரு கிறிஸ்தவ டீச்சர் அண்ணன் தங்கச்சிவளை மதம் மாத்தி, தங்கச்சிக்கு கல்விய கொடுக்காவ..தங்கச்சிக்கு அரசு வேலை கிடைக்குது. படிக்க வச்ச டீச்சர் தன் மகனையே அந்தப் பிள்ளைக்கு கட்டி வைக்காவ. அண்ணன் காரன் தங்கச்சி உசரத்தை சந்தோசமா பாக்கான். ஆனா தங்கச்சிக்கு அதுவரைக்கும் இல்லாத கெளவரம் வந்துருது..அவளுக்கு அண்ணன் மனசுல பிசாசு இருக்கான்னு நினைப்பு. கால்ல கிடக்க செருப்ப விட கேவலமா பாக்கா. அவன் குத்த வச்சிருக்க ஒரு ஓல வீட்டைக்கூட எழுதி வாங்கிட்டு அண்ணனை தெருவுல விடுதா. இன்னும் முடியாம நீளுது இந்தக் கத. சொகுசுக்கு பந்தம் வருதுன்னா நன்றிலாம் மறந்துபேருமாக்கும்
இதுபோல நிர்மலா டீச்சரோட வெறுமை நெறஞ்ச மனசை சொல்ற கத, வைராக்கியம்ற என்ற பேய் புடிச்சு ஆட்டி, அத்தனை அசிங்கத்தையும் தாண்டி, சாமிதோப்புல அய்யாவோட கண்ணாடி தரிசனம் முடிச்சிட்டு அங்க கிடைக்க அனுபவத்தை சேகரிச்சு, நாயா தவிச்சி, படிப்ப தாயா நினைச்சி விழுந்த இடத்திலே எழுந்து நிக்கிற கலாவோட கத உள்பட புத்தகம் மொத்தமும் அசலான கதைவ
புத்தம் வீடு நாவல் எப்படி ஒரு மாஸ்டர் பீஸோ அதே போல் கன்னியாகுமாரி நாகர்கோவில் மக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள் அடங்கிய இந்த நூலும் ஒரு மாஸ்டர் பீஸ் தான். முழுக்க முழுக்க மலையாள வாடை அடிக்கும் நாகர்கோவில் மொழிநடை இந்த நூலின் அலங்காரப்படை
Best one