Tamil Movie Ads News and Videos Portal

கடைசி விவசாயி- விமர்சனம்

“ஒரு நெல்ல எடுத்து உடைக்குற நேரத்துக்குள்ள ஒரு சொல்லக் கொண்டு குத்திப்புட்டானப்பா” என்ற வார்த்தைகள் எங்கள் ஊரில் அவ்வப்போது கேட்கும். ஒரு சொல்லுக்கு இருக்கும் சக்தி ஒரு காட்சிக்கும் உண்டு. கடைசி விவசாயி படத்தில் 83 வயது பெரியவர் நல்லாண்டி ஒரு அதிகாரக்குரலுக்கு எழுந்து நிற்கையில் அவருக்குள் ஏற்படும் உடல் தளர்வுடன் கூடிய மனச்சோர்வை காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் மணிகண்டன். நிச்சயமாக இந்தக்காட்சி பல வருடங்கள் நெஞ்சில் நெரிஞ்சி முள்ளாய் நிற்கும். படம் துவங்கிய 10-ஆவது நிமிடத்தில் தான் முதல் வசனம்.

“ஏய் தண்ணி வருதா?” என்ற கேள்வியோடு அந்த வசனம் துவங்கும். மழைத் தண்ணிக்காக கடைசி விவசாயியான நல்லாண்டி நெல்லறுத்து கருப்பனுக்குப் படைச்சி சாமி கும்பிடணும் என்ற ஏற்பாடோடு பயணிக்கிற படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் பல்வேறு கதைகள்.கடைசி விவசாயி உலகத் திரைமொழிகள் மத்தியில் தமிழ்சினிமாவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கான நெத்திப்பொட்டுச் சான்று.

படத்தின் திரைவெளி பங்களிப்பாளர்களில் நல்லாண்டி நடத்தியிருப்பது அசாத்திய தாண்டவம். சரியாக கேட்காத காதோடு அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு யாரிடமும் விடையில்லை… தெரிந்தாலும் சொல்லவும் முடியாது.இப்படி ஒரு அசல் முகத்தை இயற்கை எடுத்துக்கொண்டது நம் சாபக்கேடு தான். படத்தின் கதையோட்டத்திற்கு 100% தேவையானவர் என்ற நிலை இல்லாவிட்டாலும் ராமையாவாக வரும் விஜய்சேதுபதியை புறந்தள்ளிட முடியாது. “காலு உளையுதப்பா” என்று தெறித்து விழும் அவரது குரலிலும் முகபாவனையிலும் விஜய்சேதுபதி மறைந்து ராமையா பொருந்திவிடுகிறார். நல்லாண்டியின் சக வயது பெரியவர்கள், ஒருசில இளவட்டங்கள், உயரம் குறைவான ஒரு பெண், சிலபல கிழவிகள் என எல்லோரும் கேமராவை மறந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

மணிகண்டன் கண்கள் வழியாக உசிலம்பட்டி ஏரியாவை காண்பதில் கிடைக்கும் பார்த்தல் அனுபவம் விவரிக்கவே முடியாதது.இந்தப்படத்தைப் படம் பார்க்கச் செல்லும் மனநிலை தவிர்த்துச் சென்றால் பேரனுபவம் கிட்டும். படம் தான் என்ற முடிவோடுச் சென்றாலும் பெரும் அதியசத்தை நிகழ்த்தும். மொட்டைப்பாறையில் தோகை விரித்தாடும் மயில்களின் அழகை ரசிக்காத கண்கள் எல்லாம் கண்களா என்ன? அப்படித்தான் கடைசி விவசாயி படமும்❤️❤️

“அழகென்ற சொல்லுக்கு முருகா…படம் என்ற சொல்லுக்கு க/வி”

-மு.ஜெகன் கவிராஜ்