Tamil Movie Ads News and Videos Portal

காரி- விமர்சனம்

வாரியணைக்கும் பாசம், சீறியடிக்கும் கோபம், காரியடிக்கும் வீரம்னு ஒரு பக்கா வில்லேஜ் மெட்டிரியல் காரி! But அதை எந்த க்ளீஷேவும் இல்லாமல் க்ளீன் ஷேவ் மாதிரி பெர்பக்டா கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹேமந்த்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரியூர் என்றொரு கிராமம். அக்கிராமத்தின் காவல்தெய்வம் கருப்பு. இரு ஊரார் பிரச்சனையால் அந்தக் கோயிலுக்கு 30 ஆண்டுகளாக கொடை நடத்தாமல் இருக்கிறார்கள். அண்டமாக இருந்தாலும் பிண்டமாக இருந்தாலும் அதை தெண்டமாக வைக்காமல், கன்டென்டாக மாற்ற வேண்டுமானால் யாரேனும் ஒரு புள்ளியை வைக்க வேண்டுமல்லவா? அந்தப்புள்ளியை வைத்து ஊரின் வேர் காக்கும் பொறுப்பு நாயகன் சசிகுமாருக்கு வருகிறது. அதை சசிகுமார் எப்படி சரி செய்து ஊர் வேரை காத்து, தன் பெயரையும் காப்பாற்றினார் என்பதே காரியின் கதை

கிராமத்துப் படத்திற்கென்று நேர்ந்து விட்ட நடிகராக உருமாறியுள்ள சசிகுமாருக்கு நிச்சயமாக இப்படம் ஒரு கம்பேக். எமோஷ்னல், ஆக்‌ஷன் ஆகிய இடங்களில் முடிந்தளவு நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் எதார்த்தம் மிஸ்ஸிங்.. கதைப்படி 35 வயதுள்ள இளைஞனுக்கே உள்ள Fire அவருக்குள் இருந்திருக்க வேண்டும்..ஆங்காங்கே அதுவும் மிஸ்ஸிங்! படத்தில் ஆச்சர்யப்படுத்தியது இயக்குநர் பாலாஜி சக்திவேலின் நடிப்பு தான். காளை முன் மண்டியிடும் ஒரு காட்சி போதும்! ஆடுகளம் நரேனின் தாக்கம் படம் நெடுக இருக்கும்படி முதல் 15 நிமிடங்களில் முத்திரை நடிப்பை கொடுத்துள்ளார். அருண்பார்வதி கேரளா பொண்ணு போல! என்னவொரு இயல்பான நடிப்பு!! அம்மு அபிராமிக்கு படத்தில் எந்த வேலையும் உருப்படியாக இல்லை என்பது சிறுகுறை.. வில்லன் கேரக்டரின் வடிவில் போதிய நிறைவில்லா விட்டாலும் பெரிய குறையுமில்லை

இமான் இசையில் பாடல்கள்& பின்னணி இசை இரண்டுமே சரிவிகிதத்தில் படத்தின் கதையோடு கனெக்ட் ஆகியுள்ளது. படத்தின் முக்கியமான ஹீரோ கேமராமேன் கணேஷ் சந்திரா தான். ராமநாதபுரத்தின் நிலப்பரப்பை நம் கண்பிடித்து அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் காரிருள் தான். ஆனாலும் லைட்டிங்கில் அத்தனை துல்லியம். முக்கியமாக ஜல்லிக்கட்டு விளையாட்டை படம் புடித்த விதத்தில் பெரும் மல்லுக்கட்டை நிகழ்த்தி மலைக்க வைத்துள்ளார் கேமராமேன் கணேஷ்! சபாஷ்! எடிட்டரின் கட்டிங்ஸ் எல்லாமே படத்தை சோர்வையடைய விடாமல் பார்த்துள்ளது. ஆர்ட் டிப்பார்மெண்ட் வொர்க் & technical work எல்லாமே தரம்

இயக்குநர் ஹேமந்த் பாரம்பரியங்களையும் கிராமத்து மனிதர்களின் நம்பிக்கையையும் மிக ஆழமாக பதிவு செய்து அசத்தியுள்ளார். படத்தில் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் விசயங்களில் ஒன்று வசனங்கள். கரன்ட் பொலிட்டிகல் வசனங்களை கூட போகிற போக்கில் கதையை துருத்தாமல் அமைத்துள்ளார் இயக்குநர். வட்டார வழக்கு வசனங்களில் ராமநாதபுரம் மணத்துக்கிடக்கிறது.

இதுதான் நாயகனின் இலக்கு என ஒன்றை மட்டும் தீர்மானித்து வேகமாக பாய வேண்டிய காரி சில இடங்களில் தடம் மாறி பயணித்தாலும், கடைசியில் ஒரே இடத்தில் நின்று நம் கரம்பற்றி விடுகிறான். அடல்ட் கன்டென்ட் எதுவும் இல்லாமல் நல்ல டீசன்டான படம் என்பதால் இந்த வீக்-என்ட்-ஐ காரியோடு கொண்டாடலாம்

பின்குறிப்பு:

படத்தில் வில்லன் வீரம் செறிந்த மாடுகளின் கறியைச் சாப்பிடுவார். அதை மூர்க்கமாக ஹீரோ எதிர்ப்பார். அடுத்து கிராமத்து தெய்வங்கள் நம்பினோர்க்கு அதியசங்களை செய்யும் ஆகிய சமாச்சாரங்கள் எல்லாம் படத்தில் இருக்கின்றன. இதை எல்லாம் வைத்து இது பிஜேபிக்கு ஆதரவான படம் என நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல!

பின்னும் பின் குறிப்பு:

படத்தில் அரசியலா என்ன இருக்குன்னு பார்க்காதீங்க கய்ஸ்.. படம் கமர்சியலா எப்படி இருக்குன்னு பாருங்க! அப்படிப் பார்த்தால் காரி அட்டகாசம்! So don’t miss it

3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்