Tamil Movie Ads News and Videos Portal

வருண் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கிடையாது ஐசரி கணேஷ் பேச்சு!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது,

‘சிங்கப்பூர் சலூன்’ வெற்றியைத் தொடர்ந்து இப்போது இந்தப் படத்திற்காக உங்களைச் சந்திக்கிறேன். மார்ச்1 அன்று ‘ஜோஷ்வா இமை போல காக்க’ படம் வெளியாகிறது. இதுவும் எங்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கெளதம் சார் சொன்னார். நான் உடனே சம்மதம் சொன்னேன். எந்தவொரு படத்தின் கதை, படப்பிடிப்பில் நான் பொதுவாக தலையிட மாட்டேன். ஆனால், எதேச்சையாக இதன் படப்பிடிப்பு பார்க்க நேர்ந்தது. இதுவரை தயாரித்த 25 படங்களில் நான் பார்த்த முதல் படப்பிடிப்பு இந்தப் படம்தான். அதுவும் போய் 10 நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு வந்தேன். என்னுடைய சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் எல்லாம் கேமியோ ரோல் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு கெளதமின் லவ் படங்கள் பிடிக்கும். அவரிடம் வருணை அறிமுகப்படுத்தினேன். வருண் சாக்லேட் பாய் போல உள்ளான் எனக் கூறி அவரை வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி செய்யலாம் என்று கெளதம் உற்சாகமாக சொன்னார். பிறகு இது ஆக்‌ஷன் படமாக மாறியது. வருண் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கிடையாது. ஒவ்வொரு வேலைக்கும் தனது கடின உழைப்பைக் கொடுப்பார். இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில் 10 சண்டைக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க ஆக்‌ஷன் தான். ஹாலிவுட் படம் போல ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்திருக்குறார்கள். அதற்கு கதிரின் ஒளிப்பதிவும், கார்த்திக்கின் இசையும் பெரும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளனர். இதில் நடித்துள்ள கிருஷ்ணாவுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.