Tamil Movie Ads News and Videos Portal

ஜோ- விமர்சனம்

ஜோ என பெய்யும் இந்த மழைக்காலத்தில் நாம் காதலில் நனைந்து களிக்க ஒரு காதல் மழையை ஜோ படம் மூலம் இறக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம்

காதலே தவம், காதலியே வரம் என வாழும் ஹீரோ ரியோராஜுக்கு மாளவிகா மனோஜ் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது கிரீன் சிக்னல் காட்டுகிறார். அதன்பின் எழும் திடீர் சிக்கல்கள் ஹீரோவை உடைந்த காதலும், உடைந்த மனதுமாய் திரிய வைக்கிறது . அவர் மீள்வதும் வாழ்வதுமே படத்தின் மிச்சசொச்ச கதை

எடுத்துத் தைத்த அளவுச் சட்டையாக கதைக்குள் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் ஹீரோ ரியோராஜ். காதலோடு வாழும் போதும் வீழும் போதும் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். மாளவிகா மனோஜ் கேரளா பாஷையில் பேசிக்கொண்டே காதலை தூவிவிடும் போதெல்லாம் ரசிகர்களும் காதலில் விழுகிறார்கள். இரண்டாம் பாதியில் வரும் பாவ்யா படத்தின் சில முக்கிய எமோஷ்னல் சீன்களை தன் பார்வையாலே தாங்குகிறார். அன்புதாசன் உள்ளிட்ட ஹீரோவின் நண்பர்கள் கேரக்டர்கள் எல்லோரும் பக்கா பெர்பெக்ட் ரகம். அத்திப்பூவில் அதிமதுரம் போல அமைந்த கேரக்டர் சார்லிக்கு. கால்மணிநேரம் வந்தாலும் ஆழ்மனதில் பதிகிறார்

சித்துகுமாரின் பின்னணி இசை பல சித்துவேலைகளைச் செய்து நம்மை ஈர்க்கிறது. தரமான ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

க்ளீஷேயான லைன் என்றாலும் அதை க்ளீஷே இல்லாத திரைக்கதையால் ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர். எந்த வேலையும் இல்லாத ஹீரோவிற்கு எப்படி அம்மாம்பெரிய சம்பந்தம் உள்ளிட்ட சில லாஜிக் கேள்விகளை இயக்குநர் உடைத்தாலும் இடையிடையே சிற்சில லாஜிக் கேள்விகள் எழத்தான் செய்கிறது.

ஒவ்வொரு சீக்வென்ஸ் முடியும் போதும் அடுத்த சீக்வென்ஸில் சின்னதாக ட்விஸ்ட் வைத்து கதையை நகர்த்திய விதத்தில் அசத்தியுள்ளார் இயக்குநர். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஹைக்கூ கவிதை

“காதலை மறந்துவிட முடியாது. கடந்துவிட முடியும். அதற்கு துணையாக காதலே வேண்டும்” என்று சொல்லி படம் முடியும் போது நம் மனமும் காதலால் நிரம்பி வழிகிறது

ஜோ- காதல் மழை
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்