Tamil Movie Ads News and Videos Portal

ஜப்பான்- விமர்சனம்

 

“உன்னை யாராவது சப்பாணின்னு சொன்னா சப்புனு அடிச்சிடு” பதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி கமலிடம் சொல்வார். இந்த தீபாவளிக்கு யாராவது ஜப்பான்னு சொன்னா, நாமளும் அதைத் தான் செய்யணும் போல! படமாய்யா எடுத்து வச்சிருக்கீங்க!

கதை?

ம்ஹும். ஒரு பெரிய நகைக்கடையில் கொள்ளையடிக்கப்படுது. அடித்தவர் இண்டியா மேட் ஆன ஜப்பான்! (அதான் கார்த்தி) என முடிவு பண்ணி போலீஸ் அவரை லாக் பண்ண நினைக்கிறது. ஆல்ரெடி பலே கொள்ளைக்காரரான கார்த்தி மாட்னாரா? இல்லியா என்பதே கதை! நாம மாட்னோம்!

சிறுத்தை சந்தானம் போன்ற தோற்றம், கோமாளித்தனமான நடிப்பு என கார்த்தி ஜப்பானில் செய்திருக்கும் பெர்பாமன்ஸ் கரியர் வொர்ஸ்டு! க்ளைமாக்ஸில் மட்டும் அவர் நடிப்பு ஆறுதல். அனு இம்மானுவேல் கார்த்தி வைத்திருக்கும் வேன் மாதி ஒரு செட் ப்ராபெர்டியாகவே வருகிறார். வாகை சந்திரசேகர் ஓகே ரகம். சுனில் மட்டுமே கச்சிதமாக ஸ்கோர் செய்கிறார். இன்னொரு ஆடு போன்ற கேரக்டரில் நடித்தவரும் கவனிக்க வைக்கிறார்

ரவிவர்மன் ஒளிப்பதிவு படத்தில் இருக்கிறது. அவ்வளவு தான். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை..படத்தின் விஷுவல் படத்தை நம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. ஜிவியின் இசையில் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே ஓகே ரகம். பிலோமின் ராஜ் படத்தை இன்னும் ஏராளதாராளமாக வெட்டியிருக்கலாம்

ஹீரோவின் பின்புலம் படத்தின் கடைசியில் சொல்லப்படுகிறது. அதற்குள் நமக்கு 13 முறை கொட்டாவி வந்துவிடுகிறது. தெளிவான கதைசொல்லலும், குழப்பியடிக்காத கருத்தியலும் இல்லாமல் ஜப்பான் திக்கு தெரியாமல் ஓடுகிறது. தமிழ்நாட்டில் படம் ஓடுகிறது. 50 அடிக்கு முன்னால் இருக்கும் ஸ்கீரினில் இருக்கும் நாயகனோடு நாம் கனெக்ட் ஆகவே இயலவில்லை. காரணம் ரைட்டிங்கில் அவ்வளவு வீக். எப்படி நம் நாட்டுக்கு ஜப்பான் ரொம்ப தூரமோ..அதேபோல் படமும் நமக்கு வெகுதூரம் போய்விட்டது. ராஜுமுருகன் போன்ற அரசியல் புரிதலுள்ள இயக்குநர்கள் இப்படி அரைவேக்காட்டுத் தனமாக படத்தை குதறி வைப்பதெல்லாம் அவர்பால் அன்பு வைத்திருக்கும் எங்கள் மேல் செலுத்தும் வன்முறை என்பேன். பெண்களை இழிவுப்படுத்திப் பேசும் வசனங்களை ராஜுமுருகன் எழுதியிருக்க மாட்டார் என்றும், அதை கார்த்தி தூக்கத்தில் பேசியிருப்பார் என்றும், எஸ்.ஆர் பிரபு அதை கவனிக்காமல் விட்டிருப்பார் என்றும் நம்புவோம்!

ஜப்பான்- யப்பா🙏🙏
1.5/5
-மு.ஜெகன் கவிராஜ்