நீண்ட காலத்திற்குப் பின் தமிழில் ஒரு குறிஞ்சி பூ இந்த ஜமா
கூத்து கட்டும் கலைஞனான நாயகன் பாரி இளவழகனுக்கு தன் வாழ்நாளில் ஒருநாள் அர்ஜுனன் வேசம் கட்டவேண்டும் என்பது அவா. அதற்கு தடையாக இருக்கிறார் கூத்து வாத்தியாரான சேத்தன். அதன் காரணம் என்ன என்பதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்க, சேத்தனின் மகளான அம்மு அபிராமிக்கு பாரி இளவழகன் மீது காதல். அர்ஜுனன் வேசமே கட்ட விடாத சேத்தன் எப்படி மகளை கட்டி கொடுப்பார்? சேத்தனின் மனதை கலைஞன் பாரியின் செயல்பாடுகள் மாற்றியதா என்ன? என்பதே ஜமாவின் கதையாக விரிகிறது
பாரி இளவழகன் படத்தின் ஒன்மேன் ஷோ போல பிரித்தெடுத்துள்ளார். பெண் தன்மையோடு குழைந்தும் இளைந்தும் அவர் பேசும்போது அவரோடு உட்கார்ந்து கதை பேசவேண்டும் என்ற ஆசை நமக்குள் எழுகிறது. மிகச்சிறந்த நடிகனுக்குள்ள எல்லா பரிணாமங்களையும் கலந்து கட்டி அசத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து சேத்தன் காட்டியிருக்கும் நடிப்பு அசுரத்தனமானது. வன்மம் நிறைந்த அவரது பார்வையும் வார்த்தைகளும் அடடா ரகம். நாயகி அம்மு அபிராமியும் மிகச்சிறப்பாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார்
ஜமா வேண்டும் இசையை கமா போட்டு வழங்கிக்கொண்டே இருக்கிறார் இசைஞானி இளையராஜா. ஆங்காங்கே ஒலிக்கும் சில பழைய ராஜா பாடல்களும் கதைக்கு இதம். கோபி கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது. DI-ல் கலரிங்கில் நல்ல வேலை செய்துள்ளனர். எக்ஸ்ட்ரா ஷாட் என எதுவுமில்லாமல் படத்தை நேர்த்தியாக எடிட் செய்துள்ளார் பார்த்தா எம்.ஏ
படம் ஆரம்பம் முதலே அந்தக் கூத்துக்கலைக்குள் நாம் நம்மை நுழைத்துக் கொள்கிறோம். திரைக்கதை மூலமாக அதைச் சாத்தியப்படுத்தியுள்ளார் இயக்குநர் பாரி இளவழகன். நடிகராக ஜொலித்ததை போலவே இயக்கத்திலும் ஜொலித்துள்ளார். தன் தந்தை உருவாக்கிய ஜமாவை தன் வசப்படுத்த முனையும் காட்சிகளும், க்ளைமாக்ஸில் குந்தி வேடமிட்டு வைக்கும் ஒப்பாரி காட்சியும் படத்தின் ஆன்மா. எளிய கலைஞர்களின் மிக மிக எளிமையான ஆசைகளை சொல்லியிருக்கும் படம் நமது பண்பாட்டு விழுமியமாக இருப்பது ஜமாவை மரியாதைக்குள்ள படமாக மாற்றுகிறது
3.75/5
-மு.ஜெகன் கவிராஜ்