Tamil Movie Ads News and Videos Portal

ஜெயில் – விமர்சனம்

 

தமிழ்சினிமாவிற்கு வெயிலில் மையெடுத்து அங்காடித் தெருவை அசையா சொத்தாக உயில் எழுதிவைத்த பெருமை வசந்தபாலனுக்கு உண்டு. இடையில் இரு படங்களில் சறுக்கினாலும் அந்தப்படங்களில் கூட தனது தனித்துவத்தை நிறுவத்தவறவில்லை வசந்தபாலன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் ஜெயில் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவி பிரகாஷை கதையின் நாயகனாக மாற்றியிருக்கிறார். அடித்தட்டு மக்களை நிலம் விட்டு வெளியேற்றினால் அவர்களுக்கு என்னென்ன உளவியல் பிரச்சனைகள் வரும், அவர்களை வெளியேற்றுவதன் மூலம் அதிகார மட்டம் அடையக்கூடிய லாபம் என்ன என்பதை பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

சர்வம் தாளமயம், நாச்சியார் உள்ளிட்ட மிகச்சிறு படங்களைத் தவிர தன்னை இன்னும் முழு நடிகனாக மாற்றிக்காட்டாத இசை நாயகன் ஜீவி பிரகாஷ் இந்தப்படத்தில் ஓரளவு நடித்திருக்கிறார். இசையின் மூலம் இதயத்தில் பசை தடவும் வல்லமை கொண்ட இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் ராக்கி என்ற கேரக்டரில் இப்படத்தில் மிளிர்கிறார் வாழ்த்துகள்.
அனுபவ த்தை நடிப்பாக்கி இருக்கும் ராதிகா உள்பட படத்தில் தோன்றும் யாவரும் நடிப்பு விசயத்தில் சரியான அட்டனென்ஸ் போடுகிறார்கள்

கதாநாயகனாக தன்னை முழுமையாக ஒப்பு கொடுத்ததாக எண்ணி இசை நாயகனாக பின்னணி இசையில் ஜொலிக்க தவறிவிட்டார் ஜீவி. அதே சமயம் பாடல்கள் மூலம் தானொரு இசை அசுரன் என்பதையும் நிறுவத் தவறவில்லை அவர்

அரசால் அள்ளிட்டு வந்து குடியேற்றப்பட்ட சென்னை காவேரி நகர் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக படம் துவங்குகிறது. படத்தின் நாயகன் ஒரு திருடன். சிறிய திருடன் தான் என்பதாக குறிப்பிட்டுச் சொல்கிறார் இயக்குநர். அவரின் உற்றதோழன் ஏரியாவில் போதைப்பொருள் விற்பவன். இன்னொரு தோழன் ஜெயிலில் இருந்து வெளியாகி பெட்ரோல் பல்க்கில் வேலை செய்கிறான். இவர்களுக்கு எதிர்கேங் ஒன்றுண்டு. இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நடப்பதுண்டு. இவர்களின் சண்டையை வளர்த்துவிட ஓர் அரசியல்வாதி உண்டு. இவர்களின் சண்டைகள் மற்றும் போதைப்பொருள் விற்பதன் மூலம் பெருத்த லாபம் அடையும் ஒரு இன்ஸ்பெக்டர் உண்டு.

எளியவர்களை வஞ்சித்து வாழ்ந்தே பழக்கப்பட்டவர்களின் சதியால் நண்பனை ஜீவி இழக்கிறார். பின் இழப்பிற்கான இழப்பீடை எப்படி அடைகிறார் என்பதாக கதை பயணிக்கிறது

அடித்தட்டு மக்களை நிலம் நீங்கச் சொல்வது எத்தகைய பெரும் ரணம் என்பதை படம் பேசப்போவதாக சொன்ன வசந்தபாலன் அதற்கான விசயங்களை சாம்பாரில் கலந்த கருவேப்பிலை அளவிற்கே சேர்த்திருக்கிறார். மத்தபடி காவேரி நகரில் சட்டத்திற்கும், சமூகத்திற்கும் புறம்பாக செயல்படும் சில இளைஞர்களின் கதையாகவே தான் ஜெயில் இருக்கிறது. மூலக்கதையை விட்டுவிட்டு ரவிமரியாவின் “மூல” க்கதைக்கு ஒரு இடத்தில் முக்கியத்துவம் கொடுத்தபோதே மனம் ரணமாகி விட்டது. இதில் உள்மூலம் வெளிமூலத்திற்கான விளக்கம் வேறு!

கதையும் சரி திரைக்கதையும் எந்த இலக்கும் இன்றி ஓடுகிறது. தொடர்பற்ற காட்சிகளும், சலிப்பை ஏற்படுத்தும் போலியான செண்டிமெண்டும் “இதுவா எங்கள் வசந்தபாலன்?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டது

“இரு நல்ல படங்களைத் தந்த தனக்கு மீண்டும் ஒரு நல்லபடம் தருவதற்கு தமிழ்சினிமா இவ்வளவு தயங்குறதே?”என்ற ஆதங்கத்தை வசந்தபாலன் சில ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்தார்.

அந்த ஆதங்கத்தை அவர் ஆற்றலாக மாற்றியிருந்தால் ஜெயில் நமக்கும் பெரும் ஆறுதலைத் தந்திருக்கும்??

நெகட்டிவ் க்ளைமாக்ஸ் தான் ஆடியன்ஸின் ஆதரவைப் பெற ஒரேவழி என்பதை ஏனோ வசந்தபாலன் அதிகமாக நம்புகிறார். அந்த நம்பிக்கை நெகட்டிவாக மாறியிருப்பது தான் சோகம்

என்றாலும் இதுவும் மாறுதலுக்கான சறுக்கல் தான் என்ற ஆறுதலோடு ஜெயிலில் இருந்து விடுபடுவோம்??

கிடைத்த வாய்ப்பில் கோட்டை விட்டதை தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பில் பிடித்திடுங்கள் வசந்தபாலன்.
கனத்த வெயிலில் அங்காடித் தெரு வாசலில் உங்களுக்காக அரவான் போல காத்து நிற்கிறோம்

-மு.ஜெகன் கவிராஜ்