Tamil Movie Ads News and Videos Portal

ஜெய்பீம்- விமர்சனம்

ஒருவரியிலே சொல்லி விடுகிறோம்! ஜெய்பீம் நம் சினிமா! 1995- காலகட்டத்தில் இருளர் இன மக்கள் மீது பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு அவர்களை சிறையில் வைத்து சித்திரவதை செய்யும் கொடூரம் நடக்கிறது. அதை எதிர்த்து ஒரு வழக்கறிஞர் மீட்புப்போராட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்கிறார். நேர்மையாக சட்டத்தை எதிர்கொள்ள முடியாத அரசுத்துறை அதிகாரமட்டம் பல சதிகாரச் செயல்களை செய்கிறது. இறுதியில் நீதிக்கான முழக்கம் எப்படி ஜெயித்தது என்பதே ஜெய்பீம் படத்தின் கதை.

இப்படம் முன்னாள் நீதிபதி சந்துரு வாழ்வில் எதிர்கொண்ட சம்பவம் என்பதால் உண்மையைப் பார்க்கிறோம் என்ற எண்ணம் படத்தின் துவக்கத்திலே நம் மனதில் படியத்துவங்கி விடுகிறது. இருளர் இன நாயகன் மணிகண்டனை நகையைத் திருடிய வழக்கில் போலீஸ் கைது செய்கிறது. கர்ப்பிணியான அவரது மனைவி லிஜோமோல் மனித உரிமை வழக்குகளை கட்டணமின்றி நடத்தும் சூர்யாவிடம் உதவிகேட்டு வருகிறார். அதிகார அடுக்குகளை சொடக்கு மேல் சொடக்குப் போட்டு சூர்யா தகர்த்தெறிகிறார். ஆனால் இந்தப்பயணம் நமக்குள் படர விடும் வலி இருக்கிறதே அது சொல்லிமாளாது.

எப்பவோ 95-ல் நடந்த சம்பவம் தானே என்று நம்மால் இதை கடந்துபோக முடியவில்லை. இன்னமும் இதற்கோர் விடிவில்லையே..முதல்படத்திலே இப்படியான வாதை நிறைந்த ஓர் நிஜத்தை பதிவுசெய்த இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒரு சம்பவத்தை எப்படி தேர்ந்த சினிமாவாக்க வேண்டும் என்ற நேர்த்தி அவருக்கு வசப்பட்டிருக்கிறது. கதிரின் ஒளிப்பதிவில் வயலும் நிலவும் மட்டுமல்ல..வாழ்வும் வலியும் கூட துல்லியமாக இருக்கிறது. உறுத்தும் ஷாட் என்று ஒன்றுகூட இல்லை. ஜான்ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் ஜெய்பீம் முழக்கத்தின் முக்கியப்பங்கு.

வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யாவின் முகத்தில் எந்நேரமும் ஒரு அறம் சார்ந்த கோபம் பிரதிபலிக்கிறது. படத்திற்கு அதுவே பலம் சேர்க்கிறது. விரல் பிடியில் ஒரு குழந்தை, வயிற்றுக்குள் ஒரு குழந்தை என சுமந்து திரை எங்கும் கணவனின் மீட்புக்காக போராடும் அப்பாவிப் பெண்ணான லிஜோமோல் ஒரு நடிப்பு தேவதை. மணிகண்டன் மேல் விழும் ஒவ்வொரு அடிக்கும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களில் நாம் நம் அண்ணன் தம்பிகளைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. பிரகாஷ்ராஜ், சோமசுந்தரம், ஜெயபிரகாஷ் என தெரிந்த முகங்கள், இருளர் இன மக்களாக வரும் இன்னும் திரைவெளியில் தெரியாத முகங்கள் என நடிப்பில் அனைவருமே நெஞ்சைத்தொடுகிறார்கள்.

இதுவும் ஒருபடம் என கடந்த போகமுடியாத அளவிற்கு ஒரு ஆக்கப்பூர்வமான படைப்பு ஜெய்பீம். இந்தத் தீபாவளியை நாம் ஜெய்பீம் படத்தோடு கொண்டாடுவோம்!

-மு.ஜெகன் கவிராஜ்