நடிகரும் முற்போக்கு சிந்தனை கொண்டவருமான பிரகாஷ்ராஜ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் போல் இந்த இக்கட்டான தருணத்தில் பொருளாதார ரீதியாக சிக்குண்டு கிடக்கும் மனிதர்களை அதிலிருந்து மீட்பதும் எவ்வளவு முக்கியம் என்பதினை மக்களுக்கும் அரசுக்கும் உணர்த்தியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் தன் முகநூல் பதிவில், “என் வீட்டுப் பணியாளர்கள், தயாரிப்பு நிறுவனத்தின் பணியாளர்கள், அறக்கட்டளை பணியாளர்கள் மற்றும் பண்ணை வீட்டு பணியாளர்கள் என அனைவருக்கும் மூன்று மாத சம்பளத்தை கொடுத்துவிட்டேன்.
மேலும் கட்டுப்பாடுகளால் நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு அரை சம்பளத்தையாவது கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். இது வாழ்க்கை நமக்குக் கொடுத்ததைப் போல் வாழ்க்கைக்கு நாம் திருப்பி அளிக்கும் நேரம். ஒருவரோடு ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரம் இது” என்று அதில் தெரிவித்துள்ளார். இவரைப் போல் பிற தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் ஊழியர்களின் சம்பளத்தினை உறுதி செய்வார்களா..? என்ற ஆவல், எதிர்பார்ப்பு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.