சென்னையில் துக்ளக் வார இதழ் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “1971ம் ஆண்டு ஈ.வெ.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ராமர், சீதை ஆகியோரின் ஆடை இல்லாத சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன” என்று பேசினார். மேலும் திமுகவின் முரசொலி நாளிதழ் குறித்தும் இவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பல அமைப்பினரும், கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, அவர் மீது வழக்குப் போடுவதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.
மேலும் சிலர் ரஜினிகாந்த் அவரின் பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், “நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை; இது நடந்த ஒரு சம்பவம்; நான் எதையும் பொய்யாக கூறவில்லை. 1971ம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் ஆடை இன்றி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை பத்திரிக்கை வாயிலாக நான் அறிந்ததில் இருந்து கூறினேன். நான் உண்மைக்குப் புறம்பாக ஏதும் கூறவில்லை. இதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை; இது மறுக்க வேண்டிய விசயம் இல்லை; மறக்க வேண்டிய விசயம்” என்று கூறியுள்ளார்.