Tamil Movie Ads News and Videos Portal

”தெலுங்கு மக்களின் இதயத்தில் பொறிக்கப்படும்” – பவன் கல்யாண்

சென்ற மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு இந்திய நாடெங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மாட்டிக் கொண்ட வெளிமாநிலத் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் சோமபேட்டா மண்டலப்பகுதி மீனவர்கள் 99 பேர் இந்த அசாதாரண சூழலில் சென்னை துறைமுகத்தில் மாட்டிக் கொண்டனர். உண்ண உணவும் தங்க இருப்பிடமும் இன்றி கடும் சிக்கலில் தவித்து வந்த அவர்களுக்கு உதவுமாறு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டார்.

அதற்கேற்ப மீனவ தொழிலாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்யும்படி கட்டளையிட்ட முதல்வர், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உதவிகளையும் புகைப்படம் எடுத்து, டிவிட்டர் பக்கத்தின் மூலம் பவன் கல்யாணுக்கு பதில் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் பவன் கல்யாண், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரிதமாக செயல்பட்டு, எங்களின் மீனவர் சமுதாயத்திற்கு செய்த இந்த உதவி தெலுங்கு மக்களின் இதயங்களில் நிரந்தரமாக பொறிக்கப்படும். அவர் செயல் ஆணையை ஏற்று, உடனடியாக செயலில் இறங்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகளை எண்ணும் போது மனம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. இதனால் நான் பெருமையடைகிறேன். தமிழக அரசிற்கு என் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.