தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான அணுகுமுறையினால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் நடிகர் சிம்பு. அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டிற்குப் பின்னர் இப்படத்தினை அவரே தயாரிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய சிம்பு, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது சிலர் இஸ்லாமியர்களை தவறாகப் பேசினார்கள்.
அது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் தான். ஈ.வெ.ராமசாமியின் பல கொள்கைகள் பிடிக்கும். அவரது பாடல்களைப் பாடுவேன். அதே நேரம் சபரிமலைக்கும் செல்வேன். அடிப்படையில் நான் ஒரு சிவபக்தன். என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் எப்படிப்பட்டவன் என்கின்ற குழப்பம் இருக்கும். நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். அதே நேரம் மனிதனாக இருப்பது அதைவிட முக்கியம். மற்ற மதத்தினர் மீது குற்றம் சாட்டும் போது முஸ்லீமாகவும் நடிப்பேன்..” என்று விளக்கம் அளித்துள்ளார்.