கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகளவில் இயக்கம் என்பது ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. வல்லரசு நாடுகளும், தொழில்நுட்பத்தில் கரைகண்ட நாடுகள் என்று நம்பப்படும் மேற்கத்திய நாடுகள் பலவும் கொரோனா என்கின்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ் முன்பு சரணாகதி அடைந்து மண்டியிட்டுள்ள நிலையில் இந்திய மக்களின் அலட்சியப் போக்கு பெரும் பயத்தினை ஏற்படுத்துவதாக நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”கொரோனா ஏன் பரவுகிறது என்று பலரும் பல யூகங்களைக் கூறினாலும் கூட, அது பரவுவதற்கு ஒரே காரணம் தான் இருக்கிறது.
அரசின் உத்தரவை அலட்சியப்படுத்துவிட்டு வீட்டிற்குள் தனிமையைக் கடைபிடிக்காமல் தெருவில் இறங்கி ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பொறுப்பற்ற மக்களால் தான் கொரோனா கட்டுபாடின்றி பரவுகிறது” என்று ஆக்ரோசத்துடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் பேசி இருந்தார். அதை மெய்பிக்கும் விதமாக நேற்று சென்னை பாடி மேம்பாலத்தில் டூவீலர்கள் மற்றும் கார்களுடன் குவிந்த மக்களின் கூட்டம் அமைந்திருக்கிறது. இவர்களின் இந்த அலட்சியப் போக்கிற்கான பரிசு கூடிய விரைவில் கிடைக்கும் என்று வல்லுநர்கள் அச்சப்படத் துவங்கியுள்ளனர்.