இறுதிகட்டப் பணிகளில் எம்.ஜி.ஆர்.மகன்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினி முருகன்’ ‘சீமராஜா’ ஆகியப் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வரும் திரைப்படம் “எம்.ஜி.ஆர்.மகன்”. டப்மாஸ் புகழ் மிருணாளினி சத்யராஜ் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்க, சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாக சசிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. பிரபல நாட்டுப்புறப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைக்கிறார். விவேக் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
குஜராத்தி மொழி பேசி நடிக்கும் கமல்ஹாசன்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வளர்ந்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் சில காட்சிகளில் குஜராத்தி மொழிப் பேசி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக குஜராத்தி மொழியை முறைப்படி கற்றும் வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2வில் சுகன்யா கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்களோடு சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் கமல்ஹாசனின் பால்ய சிநேகிதியாக 80 வயது தோற்றத்தில் காஜல் அகர்வாலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.