Tamil Movie Ads News and Videos Portal

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘இறுதிப் பக்கம்’!

திரைப்பட உலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம் ‘ என்கிற திரைப்படம்.ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது.
படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.அவர் படத்தைப் பற்றி கூறும்போது,

“பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில்
புறவயத் தன்மையுடன்தான் இருக்கும் .ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான்.இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும் .ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும்.வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.

அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த ‘இறுதிப் பக்கம்’. ஒரு கொலை நடந்து இருக்கும் . அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி.ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக ‘இறுதிப் பக்கம் ‘ இருக்கும் ” என்கிறார் .

இவர் மென்பொருள் பொறியாளர். கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருந்த சினிமா விருப்பத்தின்படி திரையுலகத்திற்கு வந்துள்ளார்.இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம் மிக்கவர்களைப் படக்குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து, அந்தத் திறமைசாலிகளைப் பக்கபலமாக வைத்துக்கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

மனோ வெ.கண்ணதாசன் மேலும் பேசும்போது

“ஒரு திரைப்படத்திற்கு முக்கியமாக இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று நல்ல கதை. இன்னொன்று படக்குழு. அந்த படக்குழு மட்டும் சரியாக அமைந்து விட்டால் 70% படம் முடிந்ததுபோல் நம்பிக்கை வந்து விடும் .அப்படி எனக்கு நல்ல திறமைசாலிகள் கொண்ட படக்குழு தேடினேன் அமைந்தது.இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலு, ஏராளமான குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர் .இப்போது ஏ.ஜி.எஸ்ஸின் ‘நாய் சேகர் ‘ படத்திற்கு அவர் தான் ஒளிப்பதிவாளர்.இதற்கு இசையமைத்துள்ள ஜோன்ஸ் ரூபர்ட், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பொறியாளன் ‘ மாயன் ‘ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் . எடிட்டர் ராம்பாண்டியன் ‘ஆண்டவன் கட்டளை ‘, ‘கிருமி ‘ போன்ற படங்களில் உதவி எடிட்டராகப் பணியாற்றியவர்.இப்படி அனுபவம் உள்ள பலம் வாய்ந்த படக்குழு அமைத்துக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஶ்ரீநிவாசன் அவர் நடித்த வெப்சீரிஸ் பார்த்து நான் அவரது திறமையை மிகுந்த திறமைசாலி என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘கள்ளச்சிரிப்பு’ அறிந்திருந்தேன். மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து இருக்கிறார்கள்.நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவன். அதனால் எனது திரைக்கதையை அமைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் காட்டி பிடித்திருந்தால் மட்டும் பணியாற்றுங்கள் என்ற ரீதியில் தான் அனைவரையும் அணுகினேன். கதை மேல் ஏற்பட்ட நம்பிக்கை மட்டுமே அவர்களை பணியாற்றச் சம்மதித்து இந்த படம் உருவாகி இருக்கிறது. என்கிறார்.

‘இறுதிப் பக்கம்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பிடித்துப்போய் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இதைத் தங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி நெகிழ்ந்து போய் உள்ளது படக்குழு.படத்தை ஆக்சன் ரியாக்சன் பிலிம்ஸ் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.படம் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக உள்ளது. விரைவில் வெளியாகும்.