இந்தியன்2- விமர்சனம்
ஊழலுக்கு எதிரான நவீன சாட்டை
நாட்டில் நடக்கும் பல அவலங்களை வெளிச்சப்படுத்த ஒரு யூட்யூப் சேனல் நடத்துகிறது சித்தார் & கோ. என்னதான் அவர்கள் இணையத்தில் கூவினாலும் அது யாருடைய இதயத்தையும் தொட்டுத் திருத்தவில்லை. அதனால் இந்த அநியாயங்களை ஒழிக்க இந்தியன் தாத்தா மீண்டும் வரவேண்டும் என விரும்புகிறார்கள். இந்தியன் தாத்தாவும் வருகிறார். அவர் வந்தபின் என்னென்ன நடந்தது என்பதே படத்தின் திரைக்கதை
கமல் கேரக்டர் ஆக்டிங்கில் மாஸ் காட்டியிருக்கிறது. ரைட்டிங்கிலும் கமலுக்கு வேல்யூ கொடுத்திருந்தால் திரை தீப்பிடித்திருக்கும். சித்தார்த் முன்பாதியில் சற்று கடுப்படிக்கும் நடிப்பைக் கொடுத்தாலும் பின்பாதியில் அசத்தி விடுகிறார். ரகுல் ப்ரீத்திசிங், பிரியாபவானி சங்கர், ஜெகன், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா என டஜன் கணக்கில் ஆர்டிஸ்ட் இருக்கிறார்கள். எல்லோரும் சிறந்த நடிப்பிற்கு உத்திரவாதம் தருகிறார்கள்
ரவிவர்மன் ஒளிப்பதிவு தரமான படைப்பை கண்முன் நிறுவுகிறது. வரைகலை டீமும் ஆகச்சிறப்பாக உழைத்துள்ளனர். அனிருத் தன்னிசையில் சற்று தன்னிலை மறந்திருப்பார் போல. சில இடங்களில் மட்டுமே மாஸ் காட்டுகிறார். பாடல்களில் இரு பாடல்கள் வாவ் ரகம். ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் மேக்கப் டிப்பார்ட்மெண்ட் வொர்த்து. வசனங்களில் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லெட்சுமி சரவணக்குமார் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்
ஊழல் என்பது தேசத்தின் இதயத்தில் ஒட்டியுள்ள புற்றுக்கட்டி. நிச்சயமாக நேர்மை எனும் மருத்துவத்தால் அதை வெட்டி எடுத்தே ஆகவேண்டும். ஆனால் இங்கு நேர்மையான மருத்துவம் என்பதே இல்லை என்ற நிதர்சனத்தைப் பேசியுள்ளார் இயக்குநர் ஷங்கர். தன் முத்திரைப்பதிக்கும் பல காட்சிகள் படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. மூன்று மணிநேரம் என்றாலும் விறுவிறு திரைக்கதை நம்மை சோர்வடையச் செய்யவில்லை. சின்னச் சின்ன சமரசங்கள் செய்து கொண்டு திரையரங்கு செல்லுங்கள். முக்கியமாக நெகட்டிவ் விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்லுங்கள். படம் உங்களுக்குப் பிடிக்கும். நல்லது செய் நல்லவனாக இரு என்று சொல்லும் படங்களை நாம் வரவேற்றே ஆகவேண்டும்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்