Tamil Movie Ads News and Videos Portal

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு இருபாகங்கள்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு- பார்ட்-1

இந்தியாவின் கதையை பெரும்பாலும் யார் சொன்னாலும், 1947 வரை தான் சொல்வார்கள். மன்னர்கள் ஆண்டார்கள், சுல்தான்கள் ஆண்டார்கள், பின் வெள்ளைக்காரர்கள் வணிகம் மூலம் வந்து நம்மை ஆண்டார்கள். பின் காந்தி உள்பட பலரும் போராடி வெள்ளையர்களிடமிருந்து நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள். இதோடு இந்திய வரலாறு முடிவதாகத் தான் நிறைய மக்களுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் இந்தியாவின் கதை என்ன? என்பதற்கு இந்தப்புத்தகத்தின் முதல்பாகமே நிறைய பதில் சொல்கிறது. waiting for part-2

/இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமையோ, ஒருமித்த அம்சங்களோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமை/

மேற்கூறப்பட்ட இந்தக் கூற்றை பொய்யாக்கிய அதிசயம் இந்தியாவில் எப்படி நடந்தது? நீ பேசும்மொழி எனக்குத் தெரியாது. உன் ஆன்மீகம் எனக்குப் புரியாது. ஆனால் நீயும் நானும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். பீனிக்ஸ்மாலில் ஜனகன பாட்டைப் போட்டால் இருவருமே எழுந்து விடுவோம். இப்படியான மனப்போக்கு இந்தியர்களிடையே எப்படி வந்தது..அல்லது வரவைக்கப்பட்டது? இப்படியான கேள்விகளுக் கெல்லாம் இந்த நூலில் பதில் இருக்கிறது

தனித்தனி சமாஸ்தனங்களாகப் பிரிந்து கிடந்த தேசத்தை ஒருமைப் படுத்த, மெளண்ட்பேட்டன் உள்பட பலரும் எடுத்துக் கொண்ட முயற்சியில் வல்லபாய் படேல் எடுத்த முயற்சி அல்டிமேட் ரகம். ஜோத்பூரை பாகிஸ்தானோடு சேர்த்திட ஜின்னா போட்ட ப்ளான்களை வல்லபாய் படேல் நொறுக்கிய எபிசோட்கள் எல்லாம் ஒரு வெப்சீரிஸ்க்கான கன்டென்ட். இந்தியாவில் நடைபெற்ற வன்முறைகளுக்கு மிக முக்கியமான மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்று, காங்கிரஸ் அரசு ஜின்னாவை மிகவும் குறைத்து மதிப்பிட்டது தான் என்று வரையறுக்கிறது நூல்

மேலும் நேருவின் இந்தியா என்ற பகுதி சிறப்பாக அலசப்பட்டுள்ளது. குறிப்பாக நேருவின் பரந்து பட்ட பார்வைப் பற்றியும். ஆர்.எஸ் .எஸ் அமைப்பை அவர் எதற்காக தடை செய்தார் என்பதைப் பற்றியும் அடுத்தப்பாகத்தையும் வாசித்துவிட்டு எழுதணும்…..

இந்தியா காந்திக்குப் பிறகு- பாகம்-2

இந்தியா எப்போதுமே உலக நாடுகளுக்கு பேராச்சரியம் தான். ஏன் நமக்குமே கூட. ஒற்றை மொழி தாங்கி நிற்காத எந்த நாடும் பிளவுபட்டே தீரும் என்ற கருத்தை இந்தியாவை முன் வைத்து ரஷ்யாவில் ஸ்டாலின் உள்பட எத்தனையோ அறிஞர்கள் சொன்னார்கள். அதையும் தாண்டி இந்தியா பன்மைகளை ஒருமையாக்கி நிற்கிறது. மதத்தால் பிளவுகளும், சண்டைகளும் கொலைகளும் நிறைய நடந்திருக்கிறது..நடக்கிறது. அவற்றை எல்லா மக்களும் தங்களின் வாழ்க்கைச் செயல்பாடுகளாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதே எதார்த்தம். மிகச்சிறிய அளவிலான பேர்களின் மதவாதம் சின்னதாக அசைவை ஏற்படுத்தினாலும், மதவாதிகளால் ஒருபோதும் முழுமையாக சாதிக்க முடியாது. இந்தியா அதிகளவில் இந்து மதத்தைப் பின் பற்றுவோர்களின் தேசம் தான். அதேநேரம் இந்தியாவின் மிகப்பெரிய மூன்று சூப்பர் ஸ்டார்களுமே முஸ்லிம்கள். சிறுபான்மை எனச்சொல்லப்படுபவர்களின் உச்சத்தை கொண்டாடும் மனநிலை இந்தியர்களுக்கு இருக்கிறது என்கிறார் ராமச்சந்திரகுஹா. அயோத்தியில் சண்டை போடுவார்கள், விநாயகசதுர்த்தியில் அடித்துக் கொள்வார்கள் தான். ஆனால் துண்டு துண்டாகி நிற்கும் நிலைக்குச் செல்வதில்லை. ஒன்றாகவே அடிமைத்தனத்தில் இருந்ததால் இந்தியர்களுக்குள் பிரிவினை எண்ணம் பெரிதாக மேலோங்கவில்லை போல.

இந்தியா காந்திக்குப் பிறகு சந்தித்த அரசியல் காட்சிகள் எல்லாமே தனிரகம். காங்கிரஸ் பிரதமர்களில் நேருவிற்கு எத்தனை மார்க் என்பதைச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அதற்கடுத்து வந்த பிரதமர்களில் யாரும் நேரு அளவிற்கு இல்லை என்பது இந்தப் புத்தகம் வாசிக்கும் போது தெளிவாக தெரிகிறது. நேருவின் பாசமகள் இந்திராகாந்திக்கு கட்சியில் தன்னைவிட அறிவிலும் நிர்வாகத்திலும் குணத்திலும், மனத்திலும் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. அதனால் அவர் நிர்வாக அமைப்பை தனி மனித அமைப்பாக மாற்ற முயல்கிறார். அதற்குத் துணையாக சர்வாதிகாரத்தைக் கொண்டு வருகிறார். இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போல, “இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது, நேரு உயிரோடு இருந்திருந்தால் நேரு ஜெயிலில் இருந்தபடி தான் பாராளுமன்றத்தில் இருக்கும் தன் மகளுக்கு கடிதம் எழுதியிருப்பார்.” அந்தளவிற்கு நேருவின் சாப்ட் கார்னர் செயல்களுக்கு எதிராக இருந்தன இந்திராவின் செயல்பாடுகள். மேலும் இந்திராகாந்தி தன் மகன் சஞ்சய் காந்திக்கு கொடுத்த முக்கியத்துவம் அவரது வீழ்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளன. ஆண்களுக்கு கட்டாயக் கருத்தடை என்பதை நிறைவேற்ற சஞ்சய் காந்தி எடுத்த கிறுக்குத் தனங்கள் எல்லாம் அதிரிபுதிரி ஆர்வக்கோளாறு. மேலும் மிசாவால் முதலாளி வர்க்கம் நன்றாக இருக்கிறது. போராட வழியில்லாததால் நாடு அமைதியாக இருக்கிறது போன்ற எண்ணம் சஞ்சய் காந்திக்கு ஸ்ட்ராங்காக இருந்துள்ளது. சரி நேரு அளவிற்கு இந்திரா இல்லை என்றான பின் மக்கள் காங்கிரஸை நிராகரித்து பி.ஜே.பி-யை கொண்டு வருகிறார்கள். பி.ஜே.பி -க்கு பொதுமை பிடிக்காது என்பதால், மதக்கலவரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை ஒரு மதத்தின் அடையாளமாக ஆக்கிவிட்டு, அதற்கு தாமே முதலாளி என்பதாகச் சொல்லி, அதன்மூலம் அரசியல் லாபம் அடையவேண்டும் என்பதே லாபி. அதற்காக ஆர்.எஸ்.எஸ் எந்த லெவலுக்கும் இறங்கத் தயார். இருந்தபோதும் மக்கள் முழுமையாக அதற்கு உடன்படவில்லை. வடக்கில் அம்பேத்கர், நேரு, காந்தி, விவேகானந்தர், தெற்கில் பெரியார், கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆகியோர் ஊட்டிய பொதுமைவாதம் மக்களிடம் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கிறதல்லவா! அதனால் பி.ஜே.பியால் அதிகாரத்திற்கு வர முடிந்தாலும், மதவாதம் என்பதை நடைமுறைப்படுத்த முடியாது.

பி.ஜே.பியின் இத்தகைய நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கும் தைரியம் காங்கிரஸுக்கு இன்னும் முழுமையாக கை வரவில்லை. அதற்கான காரணம் கைகள் சுத்தமில்லை. நேருவிற்குப் பிறகு இந்தியாவின் நிலை? என்ற கேள்விக்கு இந்த நூலில் ஒரு பத்திரிகையாளர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்..

“திலகர், காந்தி, நேரு ஆகியோரின் வாரிசு என்ற பெருமை கட்சிக்கு இருப்பதால், முதல் சில ஆண்டுகளில் வலுவான எதிர்க்கட்சி உருவாவது தடைபடும். பிந்தைய ஆண்டுகளில் புதிய தலைமுறை கட்சித் தலைவர்கள் மீது பொதுவான அதிருப்தி அதிகரிக்கும் காரணத்தால், தங்களைக் காத்துக்கொள்ள, வாக்குகளைப் பெற, அவர்கள் சாதி,மத, பிராந்தியக் குழுக்களை திருப்தி செய்வார்கள். பின்னர் தேர்தல்களில் மோசடி செய்ய முனைவார்கள்” 1958-ல் சொன்ன வார்த்தைகள் இவை. எத்தனை சத்தியம்! இப்படி நூல் முழுதும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும், அதே சமயம் ஏற்றுக்கொள்ள வைக்கும் செய்திகள் நிறைய. ஆர்.பி.சாரதி நன்றாக மொழி பெயர்த்துள்ளார். தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கு பதில் தாழ்ந்தவர்கள் தாழ்ந்த சாதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பது மட்டும் உறுத்தல்.

இந்த இரு பாகங்கள் எழுதுவற்கு ராமச்சந்திர குஹா வாசித்த, சேகரித்த தரவுகளின் எண்ணிக்கை மட்டும் 50 பக்கங்களுக்கும் மேல் இருக்கின்றன. இவ்வளவு பெரிய உழைப்பைப் போட்டு எழுதியிருப்பதால் இந்த இரு பாகங்களும் லட்சக்கணக்கான பிரதிகளை கண்டிருக்கிறது. நிச்சயமாக நல்லநூல்🙌

இந்தியா என்பதை, சிறப்பான ஜனநாயகம் என்று சொன்னால் பதில் 50-50 என்றே சொல்ல முடியும். இப்படி இந்தியாப் பற்றி எது கேட்டாலும் 50-50 என்று தான் சொல்ல முடியும். நம் தேசத்திற்கு வரமும் இதுவே..சாபமும் இதுவே.. இந்நூல் கூறும் முடிவும் இதுவே. இதையெல்லாம் மனதில் கொண்டு தான் நம் இந்திய மகான்கள் “மனிதர்களை குறைகளோடு ஏற்றுக்கொள்ளுங்கள்” என்கிறார்கள் போல❤️❤️

#IndhiyaVaralaaru-GandhikkuPiraguPart1 #IndhiyaVaralaaru-GandhikkuPiraguPart2 #RamachandraGuha